புதுடில்லி : வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா விதித்த தடையைத் தொடர்ந்து, அதன் அண்டை நாடுகளான நேபாளம், வங்காளதேசம், இலங்கை ஆகிய தெற்கு ஆசிய நாடுகளிலும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
இந்த தெற்கு ஆசிய நாடுகளின் முக்கிய உணவுத் தயாரிப்புகள் அனைத்திலும் ஏதாவது ஒரு வகையில் வெங்காயம் இடம் பெற்றிருக்கும். இந்தியாவில் வெங்காயத்தின் விலை 100 கிலோவுக்கு 4,500 ரூபாயாக உயர்ந்ததைத் தொடர்ந்து அந்த உணவுப் பொருளை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்திருக்கிறது.
தடையின் மூலம் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
ஆண்டுக்கு 2.2 மில்லியன் டன் வெங்காயத்தை இந்தியா 2018/2019 ஆண்டுகளில் ஏற்றுமதி செய்தது. ஆசிய நாடுகளுக்கான தேவையில் இது பாதிக்கும் மேற்பட்ட அளவாகும்.
இதன் காரணமாக, தங்கள் நாடுகளில் ஏற்பட்டிருக்கும் வெங்காயப் பற்றாக்குறை காரணமாக, தங்களின் வெங்காயத் தேவையை நிவர்த்தி செய்ய மற்ற சில புதிய நாடுகளை இந்திய ஏற்றுமதியை நம்பியிருந்த நாடுகள் நாடியிருக்கின்றன.
சீனா, எகிப்து, துருக்கி, மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய பல ஆசிய நாடுகள் தற்போது முடிவெடுத்துள்ளன.