கோலாலம்பூர்: பணியாளர்களின் சம்பள விவகாரத்தில், புட்பாண்டா நிறுவனம் ஆணவத்துடன் இருக்க வேண்டாம் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் எச்சரித்தார்.
“ஒரு நிறுவனமாக, அது ஊழியர்கள் மற்றும் நுகர்வோரால் உருவாக்கப்பட்டது. அவற்றை அவர்களே தகர்க்கலாம். ஆணவம் தீர்வு அல்ல. தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு நியாயமாக இருக்கும் பெருநிறுவனங்களை மட்டுமே ஆதரிப்போம்” என்று தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்நிறுவனத்தின் நிருவாக இயக்குனர் சயந்தன் தாஸ் குறித்து சைட் சாதிக் கருத்துத் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த சயந்தன் தாஸ், தங்களது புதிய கட்டணத் திட்டத்தில் எந்த பிரச்சனையும் இல்லையென்றும், அதனை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
“நீங்கள் வேலை செய்ய விரும்பவில்லை என்றால், தயவுசெய்து விலகிக் கொள்ளுங்கள். உங்களுக்கு பதிலாக வேறொருவர் வேலை செய்ய தயாராக இருக்கிறார். நீங்கள் அவர்களின் வாழ்க்கையை பாதிக்கிறீர்கள்” என்று கோலாலம்பூரில் நேற்று அவர் கூறினார்.