கோலாலம்பூர்: மக்களால் நிராகரிக்கப்பட்ட பொருள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) திருப்பி அமல்படுத்த எந்த ஒரு காரணமும் இல்லை என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
விற்பனை மற்றும் சேவை வரியை (எஸ்எஸ்டி) மேம்படுத்துவதற்கும் நிருவகிப்பதற்கும் அரசாங்கம் தொடர்ந்து உதவும் என்றும், இதனால் நாட்டின் வருவாயை மேம்படுத்தலாம் என்றும் பிரதமர் கூறினார்.
“நாட்டின் நிருவாகத்திற்கான நிதி திரட்ட , ஓர் அரசாங்கம் வரிகளை அறிமுகம் செய்கிறது. எனவே பல வகையான வரிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.”
“ஜிஎஸ்டி வரி முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களிடமிருந்து பல முறை புகார்களை நாங்கள் கேட்கிறோம். ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் இரண்டு முறை வரி செலுத்த வேண்டியிருந்தது.”
“வணிகர்கள் பணத்தைத் திரும்பப் பெறக் காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இன்னும் அவற்றைப் பெறவில்லை. எனவே எஸ்எஸ்டியை மீண்டும் நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை நாங்கள் (நம்பிக்கைக் கூட்டணி) காண்கிறோம்.”
“இது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், புதிய வரியை அமல்படுத்துவதை மேம்படுத்த வேண்டும். மக்களால் நிராகரிக்கப்பட்ட வரியை மீண்டும் நிலைநாட்ட எங்களுக்கு (அரசு) எந்த காரணமும் இல்லை” என்று அவர் இன்று அமைச்சரவையில் கூறினார்.