கோலாலம்பூர்: சமுதாயத்தில் தேசபக்தியை மேம்படுத்துவதற்காக ருக்கூன் நெகாராவின் கொள்கைகளுக்கு ஏற்ப அனைத்து மக்களும் வாழ வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.
ருக்கூன் நெகாராவில் உள்ள கொள்கைகள் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் போதனைகளின் அடிப்படையில் மலேசியர்களின் நடத்தைக்கு வழிகாட்டியாகும் என்று மாமன்னர் வலியுறுத்தினார்.
கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தின் மதிப்புகளை வலியுறுத்திய மாமன்னர், மேலும், இறைவனின் அருளுக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும் மக்களை நினைவுபடுத்தினார்.
“சட்டத்தின் ஆட்சியில் நீதியைப் பேண வேண்டும் என்றும், மிக முக்கியமாக, ருக்கூன் நெகாரா இறையாண்மையையும், தேசத்தையும், அரசியலமைப்பையும் நிலைநிறுத்த வேண்டும் என்றும் கோருகிறது.”
“உண்மையில், மதம், இனம், சமூக அந்தஸ்து மற்றும் அரசியல் நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து இனங்களுக்கும் அரசர்கள் அரசராக இருக்க வேண்டும்” என்று இன்று வியாழக்கிழமை மாமன்னர் கூறினார்.