கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியை மீட்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) வெளியிட்ட பட்டியல் மற்றும் எச்சரிக்கை கடிதங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அதன் தலைமை ஆணையர் லத்தீபா கோயா தெரிவித்தார்.
லத்தீபாவின் கூற்றுப்படி, எம்ஏசிசி படிப்படியாக நடவடிக்கை எடுத்து, 500,000 ரிங்கிட்டுக்கும் அதிகமாக பெற்றவர்களை முதலில் குறி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மஸ்ஜித் தானா நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ் எர்மியாட்டி சம்சுடின் பெயரை, எம்ஏசிசி வெளியிட்ட 80 நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலிலிருந்து, நீக்கியதாக எழுந்த குற்றச்சாட்டை அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
“சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியல்கள் 500,000 ரிங்கிட் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையைப் பெற்ற நபர்களுக்கானவை. எம்ஏசிசி முதலில் பெரிய தொகைக்கு முன்னுரிமை அளித்துள்ளது.” என்று லத்தீபா இன்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எம்ஏசிசி வழக்கமான நடவடிக்கையை எடுக்கும் என்றும், மேலும் 1எம்டிபி நிதியை யாருக்கும் சாதகமாக இல்லாமல் மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் எனவும் லத்திபா குறிப்பிட்டார்.
கடந்த திங்களன்று, 420 மில்லியன் ரிங்கிட் எச்சரிக்கை கடித அறிவிப்பை எம்ஏசிசி வெளியிட்டிருந்தது. வெளியிடப்பட்ட தேதியிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அவை செலுத்தப்பட வேண்டும் என்று அறிவித்திருந்தது.