கோலாலம்பூர்: அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி படிப்படியாக நெடுஞ்சாலை கட்டண வசூலை அகற்றும் முயற்சியாக மக்களுக்கு பிளாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து நெடுஞ்சாலைகளிலும் சராசரியாக 18 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் நேற்று வெள்ளிக்கிழமை 2020-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை அறிவிப்பின் போது தெரிவித்தார்.
இந்த தள்ளுபடியின் மூலமாக அடுத்த ஆண்டு மக்கள் 1.13 பில்லியன் ரிங்கிட் வரையில் சேமிக்க இயலும் என்றும், 2038 வரை மொத்தமாக 43 பில்லியன் ரிங்கிட்டை சேமிக்க முடியும் என்றும் லிம் கூறினார்.
இருப்பினும், இது குறித்த விரிவான தகவல்களும், அது நிறைவேற்றப்படும் தேதி உட்பட எந்த விவரங்களும் லிம் வெளியிடவில்லை.
நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, ஒவ்வொரு நெடுஞ்சாலைக் கட்டணத்தையும் படிப்படியாக அகற்றுவதற்கான இறுதி இலக்கைக் கொண்டு சிறந்த விலையைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் தொடங்கும் என்றும் லிம் கூறினார்.
மேலும், நான்கு நெடுஞ்சாலைகளான, கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலைகள் (கெசாஸ்), டாமான்சாரா– பூச்சோங் நெடுஞ்சாலை (எல்டிபி), ஸ்பிரிண்ட் எக்ஸ்பிரஸ்வே (ஸ்பிரிண்ட்) மற்றும் ஸ்மார்ட் டன்னல் (ஸ்மார்ட்) ஆகியவற்றை கையகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் லிம் தெரிவித்தார்.