கோலாலம்பூர்: அவதூறு குற்றச்சாட்டில் சுஹாராம் நிருவாக இயக்குநர் சிவன் துரைசாமி மீது கங்கார் காவல் துறை தலைவர் வாரி கியூ நேற்று வெள்ளிக்கிழமை புகார் அறிக்கை பதிவு செய்துள்ளார்.
கடந்த மாதம் காவல் துறையினர் அப்பாவையும் மகனையும் தவறாக கைது செய்து சித்திரவதை செய்ததாக சிவன் குற்றம் சாட்டியுள்ளார். மனித உரிமை ஆர்வலருமான சிவன் நேற்று செய்தியாளர் சந்திப்பில் இதனைக் கூறினார்
“அவதூறுக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 500 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் அவர் விசாரிக்கப்படுவதற்காக நான் இந்த அறிக்கையை வெளியிட்டேன்” என்று வாரி மலேசியாகினியிடம் கூறியுள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பின் போது, புகழேந்தி ராஜூ மற்றும் அவரது மகன் லிங்கேஸ்வரன் ஆகியோர் கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர் என்று சிவன் தெரிவித்தார். ஒரு பெண்ணின் புகாரை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு பேரும் பிணையில் விடுவிக்கப்படாமல் நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சிவன் கூறினார். மேலும் அவர்கள் கைது செய்யப்பட்ட இரண்டாவது நாளின் மட்டுமே பின்னணியில் உள்ள காரணங்களை காவல் துறை கூறியதாகவும் அவர் தெரிவித்தார். பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், இருவரும் தவறாக கைது செய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டை வாரி மறுக்கிறார்.
“நாங்கள் சட்டப்பூர்வமாக விசாரிக்கிறோம். காவல் துறையினர் புகார் அறிக்கையின் அடிப்படையில் சந்தேக நபரை நாங்கள் கைது செய்தோம். மேலும் தடை உத்தரவு கோரி நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றோம். யாரும் தவறாக கைது செய்யப்படவில்லை. சிவனுக்கு அதிருப்தி இல்லையென்றால், புகாரளிக்கலாம். பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த வேண்டிய அவசியமில்லை” என்று அவர் கூறினார்.