கோலாலம்பூர்: மலேசியாவில் விடுதலைப் புலிகள் தொடர்பான கைதுகளைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் மீது மலேசிய காவல் துறையின் கவனம் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைவரான சீமான், புலிகளின் ஆதரவாளர் மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளின் நிறுவனர் மற்றும் தலைவரான வேலுபிள்ளை பிரபாகரனை தீவிரமாக பின்பற்றுபவராவார்.
விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் சீமான் மலேசியாவிற்கு பயணங்களை மேற்கொண்டதும், உள்ளூர் அரசியல்வாதிகளுடன் பல கூட்டங்களை நடத்தியுள்ள புகைப்படங்களும், காணொளிகளும் பரவலாக சமூகப் பக்கங்களில் பதிவிடப்பட்டன.
புலிகள் போராட்டங்களை மீண்டும் தொடங்க மலேசியாவில் ஆதரவைத் திரட்டுவதை நோக்கமாக அக்கூட்டங்கள் நடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
சீமான் மலேசியாவுக்கு ஏராளமான பயணங்களை மேற்கொண்டதாகவும், உள்ளூர் அரசியல்வாதிகளுடன் சந்திப்புகளை நடத்தியதாகவும் காவல் துறையினருக்குத் தெரியும் என்று புக்கிட் அமான் பயங்கரவாதத் துணை இயக்குனர் டத்தோ அயோப் கான் தெரிவித்திருந்தார்.
“அடிப்படைக் காரணம் இருந்தால், அவர் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்குமாறு குடிவரவுத் துறையை நாங்கள் கேட்போம்.”
“இருப்பினும், விடுதலைப் புலிகளுக்கு நிதி சேர்ப்பதில் அல்லது பயங்கரவாதக் குழுவை ஊக்குவிப்பதில் அவரது பங்கு எவ்வளவு ஆழமானது என்பதை நாங்கள் ஆராய்ந்து பார்ப்போம்” என்று அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.