ஷா அலாம்: சிலாங்கூர் மாநிலத்தில் விற்கப்படாத ஆடம்பர வீடுகளின் பிரச்சனைக்கு தீர்வு காண வெளிநாட்டினரிடையே விற்கப்படும் வீட்டு விலை வரம்பை சிலாங்கூர் அரசு பரிசீலித்து வருவதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
தற்போதைய 2 மில்லியன் ரிங்கிட்டை குறைத்து அல்லது அதே விலையில் பராமரிக்க வேண்டுமா என்று கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அமிருடின் கூறினார்.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டினருக்கு வீட்டு உரிமையின் மிக உயர்ந்த விலை வரம்பைக் கொண்ட மாநிலமாக சிலாங்கூர் இருப்பதாக அவர் கூறினார்.
“இந்த நடவடிக்கையின் விளைவுகளையும் (விலை வரம்பைக் குறைக்க) நாங்கள் கண்காணிப்போம். ஏனென்றால், நாங்கள் வீட்டின் விலைகளைப் பராமரிக்க விரும்புகிறோம். மேலும் பல்வேறு தேவையற்ற விளைவுகளையும் சமூக தாக்கங்களையும் ஏற்படுத்த விரும்பவில்லை.”
“அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில், தற்போதுள்ள வரம்பைப் பேணுவதற்கோ அல்லது குறைப்பதற்கோ ஒரு முடிவை எட்டுவோம்” என்று அவர் செய்தியாளர்களிடம் நேற்று திங்கட்கிழமை கூறினார்.
மாநிலத்தில் ஆடம்பர வீடுகளின் விற்பனையை சமாளிக்க சிலாங்கூர் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்து கேட்கப்பட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
2020 வரவு செலவு திட்டத்தில், வெளிநாட்டு உரிமையின் விலை வரம்பை 1 மில்லியனிலிருந்து, 600,000 ரிங்கிட்டுக்கு குறைப்பதற்கான நடவடிக்கை மிகக் குறைவு என்று தான் கருதுவதாக அமிருடின் மேலும் கூறினார்.