கோலாலம்பூர் – மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் அழிக்க முடியாத அத்தியாயமாக, பல சோகக் கதைகளையும், மரண ஓலங்களையும் தாங்கி நிற்கும் படலம் சயாம் மரண இரயில்வே. எண்ணிலடங்கா உயிர்களைப் பலிவாங்கிய தாய்லாந்து (அப்போது சயாம்) – பர்மா இடையிலான இரயில் பாதைக் கட்டுமானம் கடந்த 1943-ஆம் நாளில் அக்டோபர் 16-ஆம் தேதி நிறைவு கண்டது.
நேற்று அக்டோபர் 16-ஆம் தேதி, அந்த சயாம் இரயில்வே கட்டி முடிக்கப்பட்ட 76-வது வருட நினைவுகள், அந்தக் காலகட்டத்தின் மரண வேதனைகளும், சோக ஓலங்களும், அதிகாரபூர்வமாக நினைவு கூரப்படாமலேயே நம்மைக் கடந்து சென்றது.

எனினும், அக்டோபர் 16-ஆம் நாளை எப்போதும் நினைவு கூர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர், சயாம் மரண இரயில்வே நலன் குழுவினர். சந்திரசேகரன் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்படும் இந்த சயாம் மரண இரயில்வே நலன் குழு கடந்த காலங்களில் பல நிகழ்ச்சிகளையும், கருத்தரங்குகளையும் நடத்தி, இந்த விவகாரம் குறித்த அம்சங்களைத் தொடர்ந்து மக்களின் மனங்களில் நின்று நிலைத்திருக்க வைத்திருப்பதோடு, விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றது.
மலாயாப் பல்கலைக் கழகத்தில் சயாம் மரண இரயில்வே குறித்த கருத்தரங்கம் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய இந்தக் குழு, கடந்த 2018-ஆம் ஆண்டு, சயாம் மரண இரயில்வே கட்டி முடிக்கப்பட்ட 75-வது நிறைவை முன்னிட்டு, தாய்லாந்து-பர்மா இடையிலான அந்த மரண இரயில்வேயையும், அதன் தொடர்பான வரலாற்று இடங்களையும் நேரடியாகக் காண்பதற்கு சுற்றுலா ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தது சயாம் மரண இரயில்வே விழிப்புணர்வுக் குழு.

மரண இரயில்வே கட்டி முடிக்கப்பட்ட அதே அக்டோபர் 16-ஆம் தேதி அந்த சயாம் இரயில்வே பகுதியை சுற்றுலாக் குழுவினர் சுற்றிப் பார்க்கும் வண்ணம் அந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தது இந்தக் குழு. சயாம் மரண இரயில்வே நிர்மாணிப்பில் பங்கு கொண்ட – உயிரிழந்த ஒரு சிலரின் குடும்பத்தினரும் இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டது நெகிழ்ச்சியான ஒன்றாகும்.
இந்த ஆண்டும், இதே போன்று ஒரு சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது சயாம் இரயில்வே நலன் குழு. எதிர்வரும் நவம்பர் 29-ஆம் தேதி இந்த சுற்றுலா கோலாலம்பூரில் இருந்து தொடங்கி தாய்லாந்திலும், சயாம் மரண இரயில் பாதை அமைக்கப்பட்டிருக்கும் பகுதிகளிலும் சுமார் 6 நாட்களுக்கு நீடிக்கும் என வரையறுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் மேல் விவரங்களுக்கு:
சந்திரசேகரன் – 017-8887221
சயாம் இரயில்வே பணிகளுக்காக வேலை செய்ய சென்ற சுமார் 2,700 ஆஸ்திரேலியர்கள் உயிரிழந்ததை, ஆஸ்திரேலியா எப்போதும் நினைவு கூர்ந்து, அதை ஒரு வரலாற்று நிகழ்வாக எப்போதும் செயல்படுத்தி வருகிறது.
ஆனால், அன்றைய மலாயா-சிங்கையிலிருந்து சயாம் இரயில்வே நிர்மாணிப்புக்காக ஜப்பானியர்களால் கொண்டு செல்லப்பட்ட சுமார் ஒரு இலட்சம் மக்கள் உயிரிழந்திருந்தும், அதுகுறித்த எந்தவித நினைவுகூரல்களும், சிறப்பு நிகழ்ச்சிகளும் நம் நாட்டில் இல்லாமல் இருப்பது வருத்தத்துக்குரியது எனக் கூறுகிறார், இந்த விவகாரத்தை பல்வேறு தளங்களில் தொடர்ந்து கொண்டு செல்லும் சயாம் இரயில்வே நலன் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன்.
மரணமடைந்தவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்பதும் எப்போதும் நமக்கு நெருடலைத் தருவதாகும்.