கோலாலம்பூர்: பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 அல்லது சொஸ்மா இரத்து செய்யப்படாமல், திருத்தம் செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து லோயர்ஸ் பார் லிபர்ட்டி (எல்எப்எல்) கவலை தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் சொஸ்மா சட்டம் மூலமாக எவ்வளவு துஷ்பிரயோகங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை புதிய அரசாங்கத்திற்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை என்று அதன் இயக்குனர் மெலிசா சசிதரன் கருதுகிறார். அச்சட்டம் குறிப்பாக அரசாங்கத்தை எதிர்ப்பவருக்கு எதிராகவும், எதிர்க்கட்சியினரையும் தண்டிக்க இலக்காக இருந்து செயல்பட்டது என்று அவர் கூறினார்.
“நம்பிக்கைக் கூட்டணி இன்று நடைமுறையில் ஆட்சியில் இருப்பதால் இந்த அடக்குமுறை சட்டம், ஒரு நியாயமான சட்டமாக மாறிவிட முடியாது” என்று அவர் இன்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
ஒரு குற்றவியல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் எவருக்கும் வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமையை, சொஸ்மா நியாயமான முறையில் செயல்படத் தவறிவிட்டது என்றும், அது அனைத்துலக தரத்தை பூர்த்தி செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் சொஸ்மாவின் கீழ் பெறப்பட்ட பெரும்பாலான ஆதாரங்களை சவால் செய்யவோ அல்லது குறுக்கு விசாரணை செய்யவோ முடியாது என்று அவர் கூறினார். ஏனெனில், இந்தச் சட்டம் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் சாட்சியமளிக்க அனுமதியளிக்கிறது. இதனால் நியாயமான விசாரணையின் அடிப்படையை இது மீறி விட்டது என்று அவர் தெளிவுப்படுத்தினார்.
அதன்படி, சொஸ்மா மற்றும் பிற அடக்குமுறை சட்டங்களை உடனடியாக இரத்து செய்யுமாறு மெலிசா அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.
“இந்த கடுமையான சட்டங்கள் இன்னும் நம் சட்ட புத்தகங்களில் இருக்கும்போது மலேசியா ஒரு ஜனநாயக நாடு என்று கூற முடியாது,” என்று அவர் கூறினார்.