இலண்டன் – எதிர்வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் புதிய உடன்பாடு ஒன்று காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் நாணயமான பவுண்ட் மதிப்பு ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மே மாதம் முதற்கொண்டு இன்றுதான் பிரிட்டிஷ் நாணயத்தின் மதிப்பு அதிக அளவில் உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பிரிட்டிஷ் பவுண்ட் 1.29 அமெரிக்க டாலராக இன்று பரிமாற்றம் கண்டது.
அடுத்த கட்டமாக இன்று வியாழக்கிழமையன்று மற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் அந்தப் புதிய ஒப்பந்தத்திற்கு தங்களின் ஒப்புதலை அளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் சனிக்கிழமை பிரிட்டனின் நாடாளுமன்றம் பிரெக்சிட் விவகாரம் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துகிறது.
இந்தத் தகவல்களைத் தொடர்ந்து பிரிட்டிஷ் நாணயம் ஏற்றம் கண்டிருக்கிறது. பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஆதரவைப் பெற்றால் ஒரு பிரிட்டிஷ் பவுண்ட் மதிப்பு அமெரிக்க டாலரில் 1.35 முதல் 1.40 வரை உயரலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.