
கோலாலம்பூர் – கடந்த சில நாட்களாக தமிழ் ஊடகங்களிலும், இந்தியர் சார்பு சமூக ஊடகங்களிலும் அதிகமாகப் பகிரப்படும் – விவாதிக்கப்படும் – விவகாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் 12 பேர்களின் நிலைமைதான்!
கைது தொடங்கியவுடன் அதனைக் கண்டித்து அறிக்கை விட்ட ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் கைது செய்யப்பட்ட பி.குணசேகரன், ஜி.சாமிநாதன் ஆகிய இரண்டு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், ராம் கர்ப்பால் சிங்கும், ஆர்.எஸ்.என்.ராயரும் சட்ட உதவிகளை வழங்குவர் என அறிவித்தார்.

சரி! மற்ற பத்து பேர்களின் நிலைமை?
யாருமே யோசிக்கவில்லை!
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் எத்தகைய நடவடிக்கைகளுக்காக இரண்டு ஜசெக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்களோ, அதே காரணங்களுக்காகத்தான் மற்ற 10 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களாவது, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பலத்தைப் பின்னணியாகக் கொண்டவர்கள்.
ஆனால், கைது செய்யப்பட்ட மற்ற 10 பேரும் கூட சாதாரண நபர்கள்தான். சமூகப் போராளிகள்தான். பெரும் பணக்காரர்களுமல்ல. இந்நிலையில் அவர்களுக்கும் சட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்ற எண்ணம் பி.இராமசாமி போன்ற ஜசெக தலைவர்களுக்கோ, பிகேஆர் தலைவர்களுக்கோ, எம்.குலசேகரன் போன்ற அமைச்சர்களுக்கோ வராமல் போனது வருத்தத்துக்குரியது.
மற்றொரு அமைச்சரான பொன்.வேதமூர்த்தி கூட தனது ஹிண்ட்ராப் இயக்கத்தின் மூலம் சட்ட உதவிகள் வழங்கியிருக்கலாம். அப்படியும் எதுவும் நடக்கவில்லை.
விடுதலைப் புலிகள் தொடர்பான கைதுகளைக் கண்டித்த நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான உதவிகள் வழங்க முன்வராமல் போனது ஏன் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!
சரியான நேரத்தில் கைகொடுத்த மஇகா…
இந்த இடத்தில்தான் “இனி இந்தக் கட்சி தேவையில்லாத கட்சி, மக்களின் அபிமானத்தையும், ஆதரவையும் இழந்த கட்சி” என்றெல்லாம் நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களால் விமர்சிக்கப்பட்ட மஇகா சரியான நேரத்தில் கைது நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கைகொடுத்து, அவர்களின் கண்ணீர் துடைத்து, தனது இருப்பையும், பொறுப்பையும் காட்டிக் கொண்டது.
கைது நடவடிக்கைகளைக் கண்டித்து அறிக்கை விட்ட மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உடனடியாக அதிரடி நடவடிக்கையிலும் இறங்கினார். முன்னாள் அரசாங்க வழக்கறிஞரும் நாட்டின் முன்னணி சட்ட வல்லுநர்களில் ஒருவருமான கமாருல் ஹிஷாம் கமாருடின் என்பவரை மஇகா சார்பாக நியமித்தார் விக்னேஸ்வரன்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவசமாகவே சட்ட உதவிகள் வழங்கப்படும் என அறிவித்தார்.
மஇகாவின் சட்டக் குழுவின் தலைவரான டி.இராஜசேகரன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட ஏழுபேர் கொண்ட வழக்கறிஞர் குழுவொன்று சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் 5 பேர்களின் சார்பாக வழக்காட அணிவகுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கறிஞர் குழு கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்களையும் சந்தித்து, அந்தக் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டவர்களைச் சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்திருக்கிறது.
இது அரசியலுக்காக செய்யப்படுவதல்ல, மாறாக கைது செய்யப்பட்டவர்களில் பலர் ஏழ்மை நிலையில், சொந்த வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ள பணபலம் இல்லாதவர்கள் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார் மஇகா சட்டக் குழுத் தலைவர் டி.இராஜசேகரன்.
சரியான நேரத்தில், சரியான நடவடிக்கையை மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் எடுத்திருப்பதன் மூலம், இந்திய சமுதாயத்திற்குப் பிரச்சனைகள் என்று வந்தால் அதற்காக போராடவும், தோள் கொடுக்கவும், மஇகா எப்போதும் முன்நிற்கும் என்பதை இந்திய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்.
மஇகாவின் அரசியல் ரீதியான, சமூக ரீதியான தேவையையும் உணர்த்தியிருக்கிறார்.
இதற்கிடையில் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவரான பி.சுப்பிரமணியம் என்பவர் சார்பாக நாளை திங்கட்கிழமை ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கோர்ப்பஸ்) ஒன்றை அவரது வழக்கறிஞர் சமர்ப்பிப்பார் என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
நம்பிக்கைக் கூட்டணி இந்தியத் தலைவர்கள் மீது இந்திய சமூகத்தின் ஏமாற்றம்
ஏற்கனவே, நம்பிக்கைக் கூட்டணியின் இந்தியத் தலைவர்கள் மீது அவநம்பிக்கையும், பல்வேறு கோணங்களில் கண்டனங்களும் வலுத்து வருகின்றன.
நான்கு அமைச்சர்கள் இருந்தும் அவர்களால் இந்திய சமுதாயத்திற்கு பெருமளவில் ஏதும் பயன் இல்லை என்ற எண்ணமே இந்தியர்களிடையே மேலோங்கி இருக்கிறது.
பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி மட்டும்தான் அடிக்கடி, துணிச்சலோடு இந்திய சமுதாயத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களுக்கு எதிராகவும், குறிப்பாக பிரதமர் மகாதீருக்கே எதிராகவும் தனது கண்டனங்களைப் பதிவு செய்து வந்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், விடுதலைப் புலிகள் கைது விவகாரத்தில், ஜாகிர் நாயக்கையும், வினோத் சாம்ரியையும், சர்ச்சைக்குரிய இன்னும் சில விவகாரங்களையும் மூடி மறைத்து விட்டு, அதரப் பழசான விடுதலைப் புலிகள் விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறது, காவல் துறை.
மலேசியத் தமிழர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத் தமிழர்களிடத்திலும் உணர்வோடும், உணர்ச்சிகளோடும் இரண்டறக் கலந்து விட்ட விடுதலைப் புலிகள் – இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தை கைது நடவடிக்கைகள் – அதுவும் எந்த சொஸ்மா சட்டத்தை அகற்ற வேண்டும் என நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் போராடினார்களோ அதே சொஸ்மா சட்டத்தின் கீழ் – மேற்கொண்டிருப்பதன் மூலம், இந்திய சமுதாயத்தின் ஒட்டு மொத்த கண்டனத்தையும் பெற்றிருக்கிறது, காவல் துறையும், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கமும்!
அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்ட தனது இரண்டு உறுப்பினர்களுக்கு மட்டும் சட்டப் பாதுகாப்பு வழங்கிவிட்டு, அதே காரணத்திற்காக கைது செய்யப்பட்ட மற்றவர்களின் நிலைமை என்ன என்பதைக் கண்டுகொள்ளாமல் கைவிட்டு விட்ட ஜசெக மற்றும் நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் மீது பெருத்த ஏமாற்றம் இந்தியர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.