Home One Line P2 மின்னல் பண்பலையின் தீபாவளிக் கொண்டாட்டம்

மின்னல் பண்பலையின் தீபாவளிக் கொண்டாட்டம்

1092
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இவ்வாண்டுக்கான மின்னல் பண்பலையின் (எப்.எம்) தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 15ஆம் நாள் இரவு 7.30 மணிக்கு ஆர்டிஎம் அங்காசாபுரியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையளித்து அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார் ஆர்டிஎம்மின் ஒலிபரப்பு துணை தலைமை இயக்குநர் துவான் ஹாஜி ஜாமெல் செர்மான்.

பல ஊடகங்களின் பிரதிநிதிகளும் இந்த தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த வருடம் மாறுப்பட்ட விதமாக தீபாவளியை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் ஓர் அற்புதமான முயற்சியில் மின்னல் எப் எம் களம் இறங்கியுள்ளது. ஆம், இயற்கையை நேசிக்கும் வகையில் ‘பசுமை தீபாவளி’ எனும் கருப்பொருளில் கடமையுணர்வோடு கொண்டாடி மகிழ்கிறது மின்னல் எப்.எம்.

#TamilSchoolmychoice

இயற்கை நமக்கு கிடைத்த வரம், அதைப் போற்றுவது நம் கடமை. இயற்கையிடம் நாம் அனைவரும் நன்றிக் கடன் பட்டுள்ளோம். அந்த கடமை உணர்வோடு, முதற் கட்டமாக நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியில் நாடு தழுவிய அளவில் நேயர்களிடம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகள் வழங்கப்பட்டன என மின்னல் எப்.எம்-மின் நிர்வாகி சுமதி தெரிவித்தார். இந்த பசுமை தீபாவளி இயக்கத்தின் வழி, பொருட்களை வாங்கும் போது, நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை உபயோகப்படுத்துவது இயற்கைக்கு நாம் செய்யும் ஒரு கடமையாகும் என மேலும் அவர் தெரிவித்தார்.

ஆர்டிஎம் எப்போதுமே மக்களின் தேவைக்கேற்ப சேவை ஆற்றி வரும். அந்த வகையில், காலத்துக்கு ஏற்ற நிகழ்ச்சிகளையும் தொழில்நுட்பத்தையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்தி தீபாவளிக்கு நல்லதொரு சிந்தனையை விதைப்பதில் மின்னல் எப் எம் முனைப்பு காட்டி வருகிறது.

சமூக ஊடகங்கள் வாயிலாக பசுமை தீபாவளி இயக்கத்தை நேயர்களிடம் பரவச் செய்து, இயற்கையை நேசிக்கும் எண்ணத்தைச் இளைய சமுதாயத்திற்கு தெரிவித்துள்ளது மின்னல் எப் எம். பசுமை தீபாவளி இயக்கம் சிறந்த விழிப்புணர்வை நேயர்களிடம் விதைத்திருப்பது பெருமையாக இருப்பதாக மின்னல் நிர்வாகி சுமதி தெரிவித்தார்.

அதே வேளையில், இந்நிகழ்ச்சியில், சன் பெங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு இன்று மின்னல் எப் எம் சார்பில் தீபாவளி உடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்த 20 மாணவர்களும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆவார்கள்.

மின்னல் எப் எம் வானொலி சமூகக் கடப்பாட்டுடன் மாணவர்களுக்கு இந்த உதவியை செய்கிறது. இயற்கையை நேசிக்கும் விழிப்புணர்வுவை ஏற்படுத்துவதுடன் வசதி குறைந்தவர்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் மின்னல் எப் எம் வழி வகுப்பதாக மின்னலின் நிர்வாகி சுமதி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஊடக நண்பர்களை கெளரவித்ததோடு மேலும் கண்கவர் நடனங்களும், ஜேக்லின் விக்டரின் பாடலும் நிகழ்ச்சிக்கு மெருக்கூட்டியது.

மின்னலின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்தும் நிகழ்ச்சியில் பகிரப்பட்டது.

மின்னல் பண்பலையில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் சில படக் காட்சிகள் உங்களின் பார்வைக்கு:

நினைவுப் பரிசு பெறுகிறார் செல்லியல் இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்