சென்னை: விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் (இந்திய நேரப்படி) இடைத்தேர்தல் வாக்களிப்புத் தொடங்கியது.
இன்று மாலை 6 மணிவரையில் இந்த வாக்குப்பதிவு தொடரும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனையொட்டி நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச் சாவடிகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போதைக்கு, நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வசமும், விக்கிரவாண்டி தொகுதி திமுக வசமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரனும், அதிமுக தரப்பில் ரெட்டியார்பட்டி நாராயணனும் களம் இறங்குகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பாக இராஜ நாராயணன் போட்டியிடுகிறார்.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பாக புகழேந்தியும், அதிமுக தரப்பில் முத்தமிழ்ச்செல்வனும் போட்டியில் இறங்குகின்றனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கந்தசாமி களம் காணுகிறார்.
வருகிற 24-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.