Home One Line P2 ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க பரபரப்பான இறுதி முயற்சிகள்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க பரபரப்பான இறுதி முயற்சிகள்

987
0
SHARE
Ad

திருச்சி – (மலேசிய நேரம் 11.00 மணி நிலவரம்) தமிழகத்தின் திருச்சி நகருக்கு அருகிலுள்ள நடுக்காப்பட்டி என்ற கிராமத்தில் பயன்படுத்தப்படாமல் கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித் என்ற 2 வயதுக் குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்டாலும், தமிழக மக்கள் அனைவருமே அந்தக் கொண்டாட்டத்தில் முழு மகிழ்ச்சியுடன் ஈடுபட முடியாமல் சோகத்துடனும், உருக்கத்துடனும் சுஜித் என்ற சிறுவன் உயிருடன் மீட்கப்படுவானா என்ற என்ற ஏக்கத்துடனும்  வழிபாடுகள் நடத்திக் கொண்டு, தொலைக்காட்சிகளின் முன்னர் ஆர்வத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.

கடந்த 38 மணி நேரமாக மீட்புக் குழுவினர் சுஜித்தை மீட்கப் போராடி வருகின்றனர். அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5.40 மணி வாக்கில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் இன்றைக்கு மூன்றாவது நாளாகத் தொடர்கின்றன.

#TamilSchoolmychoice

‘அறம்’ என்ற நயன்தாரா திரைப்படத்தில் காட்டப்பட்ட காட்சிகள் போன்றே, நேரலையாக தொலைக்காட்சிகள் அந்த ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை ஒளிபரப்பி வருகின்றன. அறம் படத்தில் வந்தது போன்றே, இது போன்ற மீட்புப் பணிகளுக்குத் தயார் நிலையில் இல்லாத அரசு இயந்திரங்களைக் குறிவைத்து விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் சோகம் என்னவென்றால், சுமார் 30 அடி ஆழத்தில் விழுந்த குழந்தை, மீட்கும் முயற்சியின் போது 80 அடி ஆழத்திற்குக் கீழே சென்றுவிட்டதுதான். தற்போது மேலும் கீழிறங்கி சுமார் 100 அடி ஆழத்தில் அந்தக் குழந்தை சிக்கிக் கொண்டுள்ளது.

அந்த ஆழ்துளைக் கிணறு 600 அடிகள் வரை தோண்டப்பட்ட கிணறு என்று கூறப்படுகின்றது. அந்தக் குழந்தை மேலும் கீழே சென்று விடாமல் இருக்க, வெளியில் தெரியும் அந்தக் குழந்தையின் கை ‘ஏர்லோக்’ (Air-lock) முறையில் கம்பிகளைக் கொண்டு இறுக்கிப் பிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அந்த ஆழ்துளைக் கிணற்றின் அருகில் இராட்சத இயந்திரங்கள் கொண்டு மற்றொரு குழியைத் தோண்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 110 அடிகள் ஆழத்திற்கு தோண்டப்படும் இந்தக் குழியைச் சுற்றி மண் சரிவுகள் ஏற்படாமல் இருக்க இரும்புக் குழாய்கள் பதிக்கப்படுகின்றன.

புதிதாகத் தோன்றப்படும் இந்தக் குழியிலிருந்து, குழந்தை விழுந்து கிடக்கும் பகுதிக்கு சுரங்கம் அமைத்து, அந்தக் குழந்தையை வெளியே கொண்டு வர தீயணைப்புப் படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

6 தீயணைப்பு வீரர்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுத் தயார் நிலையில் காத்திருக்கின்றனர்.

அடுத்த சில மணி நேரங்களில் புதிய குழி முழுவதுமாகத் தோண்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(மேலும் விவரங்கள் தொடரும்)