ஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள லிட்டல் இந்தியா பகுதியில் இவ்வாண்டு வழக்கம்போல் கூட்டம் திரண்டு வந்தாலும், விற்பனை என்று பார்க்கும்போது சரிவையே கண்டதாக அந்தப் பகுதியில் உள்ள வணிகர்கள் தெரிவித்தனர் என பெர்னாமா செய்தி ஒன்று தெரிவித்தது.
நேற்று சனிக்கிழமை தீபாவளிக்கு முதல் நாள் குயின் ஸ்ட்ரீட், சூலியா ஸ்ட்ரீட், மார்க்கெட் ஸ்ட்ரீட் ஆகிய பகுதிகள், இறுதி நேர தீபாவளி விற்பனைக்காக மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தன.
எனினும் வந்தவர்களில் பலர் வேடிக்கை பார்க்க வந்தவர்களாகவும், ஏதாவது சில பொருட்களை மட்டும் வாங்குபவர்களாக இருந்தார்கள் என இந்தப் பகுதியில் பலசரக்குக் கடை வைத்திருக்கும் கே.நடராஜன் என்பவர் பெர்னாமா நிருபரிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழை, பொருட்களின் விலை உயர்வு ஆகியவையே கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மந்தமான விற்பனைக்கான காரணங்கள் என்றும் நடராஜன் கருத்து தெரிவித்தார்.
தனது கடையில் மட்டும் இந்த ஆண்டு விற்பனை அளவு 20 விழுக்காடு வீழ்ச்சியடைந்ததாக நடராஜன் தெரிவித்திருக்கிறார். பெரும்பாலோர் தீபாவளிக்கான விளக்குகளை வாங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இனிப்புத் தின்பண்டங்களும், முறுக்கு போன்றவற்றையும் விற்பனை செய்யும் கே.இரவி என்பவர் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டு தீபாவளி விற்பனை நிறைவாக இல்லை என்றாலும் சமாளிக்கும் அளவுக்கு இருந்தது என்று தெரிவித்தார். இப்போதெல்லாம் பயனீட்டாளர்கள் துரிதமாகவும், சுலபமாகவும், வசதியான முறையிலும் பொருட்களை வாங்க முற்படுகிறார்கள் என்றும் இரவி குறிப்பிட்டார்.
சேலை விற்பனை எப்படி?
அனிதா சாரீஸ் என்ற ஜவுளிக் கடையின் உரிமையாளரான எம்.பி.அழகர்சாமி அடை மழையும், லிட்டல் இந்தியா பகுதிக்கு வெளியிலிருந்து வந்த வணிகர்களாலும் விற்பனை சரிந்ததாகக் கூறினார்.
தீபாவளியை முன்னிட்டு இந்த வெளி வணிகர்களும், மற்ற மாநிலங்களில் இருந்து வந்த வணிகர்களும் தற்காலிகக் கடைகளை பினாங்கு மாநிலம் முழுவதிலும் நிர்மாணித்து விற்பனை செய்ததும் லிட்டல் இந்தியா விற்பனை சரிவுக்கு மற்றொரு காரணம் என்று குறிப்பிட்டார்.
முன்பெல்லாம் இத்தனை பெரிய எண்ணிக்கையிலான தற்காலிகக் கடைகள் இருந்ததில்லை, ஆனால் இப்போது எங்களிடம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் இங்கே உள்ள விலையை விட குறைவான விலையில் பொருட்கள் மற்ற இடங்களில் கிடைக்கின்றன என்று தெரிவித்ததாகவும் இரவி பெர்னாமா செய்தியாளரிடம் தெரிவித்திருக்கிறார்.
இணையம் வழியான வணிகத்தில் ஈடுபடலாமா என தான் முதலில் கருதியதாகவும், ஆனால், அத்தகைய வணிக முறையில் பொருட்களை பொட்டலங்களாக உருமாற்றி அனுப்புவதில் பொருட்கள் சேதமடையும் வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் வாடிக்கையாளர்கள் அத்தகையப் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை கோருவார்கள் என்பதால் நஷ்டமே நேரும் என்பதால் இணைய வணிகத்திற்கு விரிவாக்கும் முடிவை தவிர்த்ததாகவும் இரவி மேலும் குறிப்பிட்டார்.