Home One Line P1 தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் : இந்திய-சீன கலப்பின வேட்பாளரைக் களமிறக்கும் கெராக்கான்

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் : இந்திய-சீன கலப்பின வேட்பாளரைக் களமிறக்கும் கெராக்கான்

883
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – எதிர்வரும் நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் கெராக்கான் கட்சி, அதன் வேட்பாளரை அறிவித்திருக்கிறது.

கெராக்கான் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளர் வெண்டி சுப்பிரமணியம் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் நிறுத்தப்படுவதாக அந்தக் கட்சி அறிவித்திருக்கிறது.

வெண்டி சுப்பிரமணியம், சீன-இந்திய கலப்பின பெண்மணியாவார்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வெளியேறிய கெராக்கான் அப்போது முதல் எந்த கூட்டணியிலும் இணையாமல் தனித்து செயல்பட்டு வந்தது.

கெராக்கானும் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் குதிப்பதால் தேர்தல் முடிவுகளில் எத்தகையத் தாக்கங்கள் இருக்கும் என்பதை இப்போதைக்குக் கணிக்க முடியாது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

காரணம், பினாங்கு மாநிலத்தில் மட்டும் செல்வாக்கு கொண்டிருந்த கெராக்கான் கட்சி, எப்போதுமே ஜோகூர் மாநிலத்தில் தனக்கு ஆதரவான வாக்கு வங்கியைப் பெரிய அளவில் கொண்டிருந்ததில்லை. தேசிய முன்னணியின் அங்கத்துவ கட்சி என்ற முறையில் எப்போதும் ஒரு நாடாளுமன்றம், ஒரு சட்டமன்றம் என குறைந்த அளவிலான தொகுதிகளைப் பெற்று கெராக்கான் போட்டியிட்டு வந்திருக்கிறது.

தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத்திற்கான தனது வேட்பாளரை நம்பிக்கைக் கூட்டணி ஏற்கனவே அறிவித்து விட்டது. நம்பிக்கைக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பெர்சாத்து வேட்பாளராக கர்மாயின் சார்டினி அறிவிக்கப்பட்டுள்ளார்.

66 வயதான கர்மாயின் தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதிக்கான பெர்சாத்து கட்சியின் தலைவருமாவார்.

தேசிய முன்னணி வேட்பாளர் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தஞ்சோங் பியாய் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமட் பாரிட் முகமட் ரபிக் காலமானதைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த பொதுத் தேர்தலில் மசீச- தேசிய முன்னணி வேட்பாளர் வீ ஜி செங்கை 524 வாக்குகள் பெரும்பான்மையில் முகமட் பாரிட் தோற்கடித்தார்.

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் நவம்பர் 2-ஆம் தேதி  நடைபெறுகிறது.

வாக்களிப்பு நாள் நவம்பர் 16 ஆகும்.