கோலாலம்பூர் – தொழில் நுட்பத்திலும், உள்ளடக்கங்களிலும் முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்படங்களின் வரிசையில் தமிழ்த் திரையுலகை அடுத்த கட்டத்திற்குப் பெருமையுடன் நகர்த்திச் சென்றிருக்கும் படம் ‘கைதி’
ஹீரோத்தனம் காட்டும் கதாநாயகன் இல்லை. அவருக்கு இணையாக அழகான கதாநாயகி இல்லை. காதல் டூயட் பாடல்கள் இல்லை. நகைச்சுவைக்கென்று சூரி, யோகிபாபு, விவேக் என யாரும் வலுக்கட்டாயமாக இணைக்கப்படவில்லை. இன்னும் முக்கியமாக பாடல்கள் இல்லை.
எனினும், படம் தொடங்கிய நிமிடம் முதல் இறுதிக் காட்சி வரையில் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பும், விறுவிறுப்பும் குறையாமல், அடுத்து என்ன நடக்குமோ என நம்மை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ்.
ஏற்கனவே, ‘மாநகரம்’ என்ற பரபரப்பான படத்தைத் தந்து தமிழ்த் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்த லோகேஷ், அடுத்து விஜய் – விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இன்னொரு கூடுதல் தகவல்.
இந்தப் படத்தில் முதல் பாதி வரை நான்கைந்து வெவ்வேறு தளங்களில் நடக்கும் கதையை ஒரே புள்ளிக்கு மெல்ல மெல்ல நகர்த்திச் சென்றிருக்கும் அவரது திரைக்கதை புனைவு அபாரம்.
படத்தின் தரத்தைக் கருத்தில் கொண்டுதான் விஜய்யின் பிகிலுடன் துணிச்சலுடன் போட்டியில் இறக்கியிருக்கின்றனர் படத் தயாரிப்பாளர்கள். படமும் இரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வருகிறது.
கதை – திரைக்கதை – இயக்கம்

எதிர்பாராதவிதமாக ஒரு லோரியைக் கைப்பற்றும் காவல் துறை அதிகாரி பிஜோய் (நரேன்) அதில் அதிநவீன ஆயுதங்களையும், 900 கிலோ போதைப் பொருளையும் கண்டெடுத்து அதனை காவல் துறையின் ஆணையம் (கமிஷனர்) அலுவலகத்தின் இரகசியமான பாதாள அறை ஒன்றில் வைக்கிறார். அந்த முயற்சியில் காயமடையும் பிஜோய் ஒரு கையில் கட்டுடன் செயல்பட வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
வெறி கொண்டு எழும் போதைப் பொருள் கும்பல் பதிலடியாக அந்த லாரியைக் கைப்பற்றிய ஐந்து காவல் துறை உயர் அதிகாரிகளைக் கொல்ல நகரிலுள்ள குண்டர் கும்பல்களை அணி திரட்டுகிறது. பாதாள அறையில் இருக்கும் போதைப் பொருளை காவல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீட்கவும் முடிவெடுக்கிறது.
அவர்களுக்கு உதவுவது காவல் துறையில் பணத்துக்காக இயங்கும் உயர் பதவியில் இருக்கும் “கறுப்பு ஆடுகள்”. அதே வேளையில் தூய்மையான காவல் அதிகாரி பிஜோயின் உளவாளி போலீஸ் ஒருவன் போதைப் பொருள் கும்பலில் ஒருவனாக இருந்து பிஜோய்க்கு அங்கு நடக்கும் தகவல்களைத் தருகிறான்.
போதைப் பொருளை மீட்கும் முயற்சியில் முதல் கட்டமாக வில்லன் கோஷ்டி, காவல் துறை அதிகாரி ஒருவரைப் பயன்படுத்தி உணவில் விஷத்தைக் கலந்து சுமார் 15 உயர் அதிகாரிகளையும் மயக்கமடையச் செய்கிறது. அவர்களைக் காப்பாற்ற தொலைவிலிருக்கும் மருத்துவமனைக்கு ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டு செல்ல முயற்சி செய்கிறார் பிஜோய்.
எதிர்பாராதவிதமாக இந்தப் போராட்டத்தில் சிக்கிக் கொள்கிறார், ஆயுள் தண்டனைக் கைதியாக விடுதலையாகி, பத்து வயது மகளைப் பார்க்கச் செல்லும் டில்லி (கார்த்தி). கார்த்தியை லோரியை ஓட்டச் சொல்லி மயக்கமடைந்த காவல் அதிகாரிகளை ஏற்றிக் கொண்டு காட்டு வழியே பயணமாகிறார் பிஜோய். கூடவே லாரி உதவியாளர் பையனையும் (ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலக்கும் தீனா) பாதை காட்டுவதற்காக ஏற்றிக் கொள்கின்றனர்.
காவல் துறை அலுவலகத்தை குண்டர்கள் முற்றுகையிட அங்கு நடக்கும் சம்பங்கள் இன்னொரு பரபரப்பு ரகம்.
இப்படியாக பல்வேறு தளங்களில் செல்லும் கதையை, நேர்த்தியாகவும், சில இடங்களில் குழப்பியும் திரைக்கதை அமைத்து கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் லோகேஷ்.
1976-இல் வெளிவந்த ‘அசால்ட் ஒன் பிரிசிங்ட் 13’ (Assault on Precinct 13) மற்றும் 1997-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘கோன் ஏர்’ (Con Air) ஆகிய ஆங்கிலப் படங்களின் தழுவல்கள் ஆங்காங்கே தென்பட்டாலும், அது தெரியாமல் இருக்கும்படி முழுக்க முழுக்க தமிழ் நாட்டுப் பின்னணியில் திரைக்கதையைப் பின்னியிருப்பது இயக்குநரின் திறமை என்றுதான் சொல்ல வேண்டும்.
இடைவேளை வரை அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை, இடைவேளைக்குப் பின்னர் கொஞ்சம் நொண்டியடிக்கிறது.
கார்த்தி ஓட்டிச் செல்லும் லோரி மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தும் குண்டர் கும்பல்கள், அவர்களை ஒற்றை ஆளாக நின்று கார்த்தி சமாளிப்பது, முக்கால் வாசி பகுதிப் படத்தில் ஒரேமாதிரியான காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது படத்தின் தரத்தைக் குறைத்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
அதே போல, அத்தனை காவல் துறை அதிகாரிகள் மயக்கமாகிக் கிடக்கும் நிலையில், இரவு முழுக்க காவல் துறை அலுவலகம் மீது குண்டர் கும்பல்கள் ஆயுதங்களுடன் தாக்குதல்கள் நடத்தி கட்டடத்தையே உடைக்க முற்படும்போது, உயர் அதிகாரி பிஜோய் காவல் துறையின் மற்ற அதிரடித் துறைகளை உதவிக்கு அழைக்காதது, ஒட்டுமொத்த தமிழகக் காவல் துறையே இவ்வளவுதானா என நம்மை ஏளனமாகச் சிந்திக்க வைக்கிறது.
அதே போல நகரைத் தாண்டி அவ்வளவு தொலைவில், அத்தனை காவல் அதிகாரிகளையும் லாரியில் ஏற்றிக் கொண்டு – அதுவும் காட்டுப் பாதையில் செல்லும் அளவுக்கா தமிழகத்தில் மருத்துவ வசதிகள் மோசமாக இருக்கிறது என்ற லாஜிக் கேள்வியும் எழாமல் இல்லை.
எனினும் இதுபோன்ற சில குறைபாடுகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அற்புதமான திரைக்கதை அமைப்பு, இயக்கம் என பல அம்சங்களில் லோகேஷ் நம்மை மிரள வைக்கிறார். முதல் பாதிவரை ஒவ்வொரு நிமிடத்தையும் பரபரப்பாக வைத்திருக்கும் இயக்குநர் இரண்டாவது பாதியிலும் அதே கவனத்தைச் செலுத்தியிருந்தால், படம் உருவாக்கத்தில் இன்னும் உயர்ந்திருக்கும்.
கவரும் மற்ற அம்சங்கள்
பரபரப்பான அடிதடி, வெட்டு குத்துகளுக்கு இடையில் கண்களைக் கலங்க வைக்கும் சோகத்தையும் இயக்குநர் இழையோட விட்டிருக்கிறார் – கார்த்தியின் மகள் வடிவில்!
யார் தன்னைப் பார்க்க வரப்போகிறார் என்பது தெரியாமல் பத்து வயது மகள் இரவு முழுக்க தூங்காமல் விழித்திருப்பதும், தன் மகளின் முகம் எப்படியிருக்கும் என்பதை தனது கைத்தொலைபேசியில் காண்பதற்கு தொலைத் தொடர்பு (சிக்னல்) கிடைக்க முடியாமல் கார்த்தி அலைவதும், தவிப்பதும் உருக்கமான காட்சிகள்.

காதல், நகைச்சுவை, குடும்பம் என எதுவும் இல்லாத படத்தை, முழுக்க முழுக்க கலகலப்பாக நகர்த்துகிறார் லாரி உதவியாளர் பையனாக வரும் தீனா. தகுந்த வாய்ப்புகள் வந்தால், அடுத்த வடிவேலுவாக ஒரு சுற்று வருவார் – நம்பலாம்.
படம் முழுக்க இரவில் நடப்பதால், இரவு நேர ஒளிப்பதிவை கண்களை உறுத்தாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன். படம் இரவு நேரத்தில் நடக்கிறது என்பது தெரியாமல் நாம் படத்துக்குள் ஒன்றி விடுவது ஒளிப்பதிவாளரின் திறனுக்குச் சான்று.
கார்த்தியின் துணிச்சலுக்கு நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும். படம் முழுக்க ஒரு லுங்கி, அரைக் கால் சிலுவார் மட்டும் என வருவதிலும் – பத்து வருடம் பார்க்காத மகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் முகத்தில் கொண்டுவரும் சோகங்களிலும் – தன்னுடன் வரும் காவல்துறை அதிகாரி நரேனுக்கு நடிப்பிலும், காட்சி அமைப்பிலும் சரிசம பங்கு வழங்கும் பண்பிலும் – காதல், கதாநாயகி, பாடல் இல்லாத இந்தப் படத்தில் ஒப்புக் கொண்டு நடிக்க முன்வந்திருப்பதிலும் – கார்த்தியைப் பலவிதங்களிலும் பாராட்டலாம்.
பாடல் வாய்ப்பு இல்லாத களத்தில் தனது பின்னணி இசையால் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.
படத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கும் போல இருக்கிறதே என நாம் நினைக்கும்படி படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர்.
“கைதி” பார்க்க வேண்டிய – வித்தியாசமான – ஒரு புதிய சினிமா அனுபவம்!