கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பொது உணவகங்களிலும் புகைபிடிக்கும் தடை முழுமையாக அமல்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இது போன்ற தடை மக்களின் சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கான உரிமையை மீறாது என்று உயர்நீதிமன்றம், இந்த தடையை எதிர்த்து வழக்குத் தொடுத்ததற்கு எதிராகதீர்ப்பை வழங்கியது.
நீதிமன்றத்தின் முடிவினை தாம் முழு மனதுடன் ஏற்பதாகவும், பொது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் கூறினார்.
“அறிவுரைக் காலம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது, மேலும் அமலாக்கம் வருகிற ஜனவரி 1-ஆம் தேதி தொடங்குகிறது” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் தடை உத்தரவை மீறியவர்களுக்கு 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதை வலியுறுத்திய டாக்டர் சுல்கிப்ளி, புகைபிடிக்காதவர்கள் கூட இப்புகைகளால் ஆபத்தில் தள்ளப்படுவர் என்றார்.
“பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அனைவருக்கும் ஆரோக்கியமான சூழலை உருவாக்க நாங்கள் உதவ விரும்புகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் அமல்படுத்தப்பட இருந்த உணவு விற்பனை மையங்களில் புகைபிடித்தல் தடை குறித்த நீதி மறுஆய்வை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.