Home One Line P1 விடுதலைப் புலிகள் விவகாரம் : நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர்கள் யார்? யார்? (#2 – எஸ்.தீரன்)

விடுதலைப் புலிகள் விவகாரம் : நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர்கள் யார்? யார்? (#2 – எஸ்.தீரன்)

727
0
SHARE
Ad

சிகாமாட் – நேற்று செவ்வாய்க்கிழமை நாடு முழுமையிலும் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 10 பேர் வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டனர்.

சிகாமாட் நீதிமன்றத்தில் எஸ்.தீரன் (வயது 38)

சிகாமாட் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் எஸ்.தீரன் என்ற 38 வயது நபர் மீது, விடுதலைப் புலிகள் தொடர்பான பொருட்களை வைத்திருந்ததற்காக, நேற்று செவ்வாய்க்கிழமை குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் ஆவணங்களைப் பட்டுவாடா செய்யும் வேலையில் இருக்கும் தீரன் நீதிபதி ரசிடா ரோஸ்லி முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டார்.

இன்னும் திருமணம் ஆகாதவரான தீரனுக்கு எதிர்வரும் டிசம்பரில் திருமணம் நடைபெறவிருக்கிறது. கம்போங் பாயா புலாய் என்ற இடத்தில் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி விடுதலைப் புலிகள் தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாக தீரன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அவரும் குற்றவியல் சட்டத்தின் கீழ் (Section 130JB (1) (a) of the Penal Code) குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட்டு, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படலாம்.

தீரனின் வழக்கறிஞர் மதன் பிணை கோரி விண்ணப்பித்தாலும், அரசு தரப்பு வழக்கறிஞர், லோ குயின் ஹூய் பிணை வழங்கக் கூடாது என வாதிட்டார். கொண்டு வரப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் தேசியப் பாதுகாப்பு மற்றும் பொதுநலன் தொடர்பானவை என்பதால் அவருக்கு பிணை வழங்க ஆட்சேபம் தெரிவித்தார்.

தீரன் தனது முதுகுத் தண்டுப் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் இதற்காகத் தொடர் சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வாதிட்டார் அவரது வழக்கறிஞர்.

தீரன் மீது மேலும் சில கூடுதல் குற்றச்சாட்டுகள் எதிர்வரும் வியாழக்கிழமையன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் கொண்டுவரப்படவிருப்பதால், அவரை சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு அரசு தரப்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

தீரனுக்கு பிணை வழங்க முடியாது எனக் கூறிய நீதிபதி ரசிடா, அவர் முழுமையான மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பிக்காத வரையில் அது குறித்து முடிவெடுக்க முடியாது எனக் கூறியிருக்கிறார்.

வழக்கு எதிர்வரும் நவம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.