மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜி.சாமிநாதன் (வயது 34), நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் (வயது 60), ஒரு நிறுவன அதிகாரியான எஸ்.சந்துரு (வயது 38) ஆகிய மூவரும் ஆயர் குரோ டேவான் கஸ்தூரியில் கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற விடுதலைப் புலிகள் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கு பெற்றதற்காக ஆயர் குரோ அமர்வு நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டத்தின் கீழ் (Section 130J(1)(a) of the Penal Code) குற்றம் சாட்டப்பட்டனர்.
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சம் 30 வருட சிறைத் தண்டனை அல்லது அபராதம், சம்பந்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது ஆகிய தண்டனைகள் விதிக்கப்படலாம்.
வழக்கு டிசம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட, அவர்கள் மூவரும் சுங்கை பூலோ சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். யாருக்கும் பிணை வழங்கப்படவில்லை. பிணை வழங்கும் அதிகாரம் அமர்வு நீதிமன்றத்திற்கு இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் முகமட் இஸ்கண்டர் பின்னர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
ராம் கர்ப்பால் சிங் தலைமையிலான 5 பேர்கள் கொண்ட வழக்கறிஞர்கள் குழு குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் பிரதிநிதித்தது.
வழக்கு நடைபெறும்போது நீதிமன்றத்திற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினரும், சில பிரமுகர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.