Home One Line P1 ஜோ லோ வழக்கில் திருப்பம் – 1 பில்லியன் டாலர் சொத்துகளைத் திரும்ப ஒப்படைக்க அமெரிக்காவுடன்...

ஜோ லோ வழக்கில் திருப்பம் – 1 பில்லியன் டாலர் சொத்துகளைத் திரும்ப ஒப்படைக்க அமெரிக்காவுடன் உடன்பாடு

837
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1எம்டிபி தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஜோ லோ என்றழைக்கப்படும் லோ தெக் ஜோ விவகாரத்தில் எதிர்பாராத திருப்பமாக அவரது குடும்பத்தினர் அமெரிக்க அரசாங்கத்துடன் சமரசம் ஏற்படும் வகையில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (மலேசிய ரிங்கிட் மதிப்பில் சுமார் 4.18 பில்லியன்) மதிப்புடைய சொத்துகளை திரும்ப ஒப்படைக்க முன்வந்துள்ளனர்.

அமெரிக்க நீதித் துறையுடனான இந்த உடன்பாடு நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், 1எம்டிபி தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் தொடங்கியுள்ள  குற்றவியல் (கிரிமினல்), பொது (சிவில்), சொத்துகள் பறிமுதல் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும்.

அமெரிக்க நீதித் துறை பறிமுதல் செய்ய திட்டமிட்டிருக்கும் பலதரப்பட்ட சொத்துகளை உள்ளடக்கிய இந்த உடன்பாடு அக்டோபர் 30-ஆம் தேதியிடப்பட்டிருக்கிறது. கலிபோர்னியா மாநில நீதிமன்றத்தில் இதற்கான வழக்கில் இந்த உடன்பாடு சமர்ப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும்.

#TamilSchoolmychoice

ஜோ லோ தவிர்த்து அவரது குடும்பத்தின் உறுப்பினர்களாக அவரது தந்தையார் லோ ஹோக் பெங், தாயார் கோ கெய்க் இவீ, சகோதரி லோ மே லின், சகோதரர் லோ தெக் சென் ஆகியோர் இருக்கின்றனர்.

எனினும் இந்த உடன்பாட்டின்படி ஜோ லோவும் அவரது குடும்பத்தினரும் குற்றம் செய்தவர்களாகவோ, அவர்கள் தங்களின் குற்றத்தை ஒப்புக் கொள்வதாக பொருள்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே வேளையில் 1எம்டிபி தொடர்பான சொத்து மீட்பை மட்டுமே இந்த உடன்பாடு கொண்டுள்ளது என்றும், இதனால், அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் குற்றம் இழைத்திருந்தால் அதிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1எம்டிபி நிறுவன நிதியிலிருந்து கோடிக்கணக்கான பணம் ஊழல்வழி களவாடப்பட்டதாக, அமெரிக்க நீதித் துறை 2016, 2017-ஆம் ஆண்டுகளில் இந்த வழக்கைத் தொடுத்தது.

இந்த ஒப்பந்தம் வரலாற்றுபூர்வமானது என்றும் இதன்மூலம் ஜோ லோவுக்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் இடையில் நிலவும் சட்ட மோதல்கள் ஒரு முடிவுக்கு வரலாம் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக ஜோ லோவுக்கு சட்ட மற்றும் வழக்கறிஞர்கள் கட்டணங்களுக்காகத் தேவைப்படும் 15 மில்லியன் அமெரிக்க டாலர் முதலில் வழங்கப்படும்.

அமெரிக்க அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மலேசியாவிலும் இதுபோன்ற உடன்பாடுகள் காணப்படலாம் என ஊகங்கள் நிலவுகின்றன.

ஜோ லோ திரும்ப ஒப்படைக்கும் 1எம்டிபி பணத்தை மீண்டும் மலேசியாவிடமே அமெரிக்கா ஒப்படைக்கும்.