கோலாலம்பூர்: தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் தேசிய முன்னணியின் வேட்பாளராக அம்னோ தம் வேட்பாளரை நிறுத்தவில்லை என்று நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
“அம்னோ பயப்படுகிறது. எனக்குத் தெரியும், ஏனெனில் அம்னோ தம் வேட்பாளரை நிறுத்தினால், அது தோல்வி அடைந்துவிடும். அவர்கள் களமிறக்கும் வேட்பாளரைப் பொருட்படுத்தாமல் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம். இதுவே அம்னோவாக இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும், ஆனால் அவர்கள் மசீசவை தேர்வு செய்துள்ளனர், ”என்று அவர் கூறினார்.
2008 முதல் 2018 வரை இரண்டு தவணைகள் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வீ ஜெக் செங், கடந்த 14-வது பொதுத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு, நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் முகமட் பாரிட் முகமட் ராபீக்கிடம் தோல்வியுற்றார்.
கடந்த திங்களன்று, தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கான நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளராக தஞ்சோங் பியாய் பெர்சாத்து பிரிவு தலைவர் கர்மெய்ன் சர்டினி தேர்வு செய்யப்பட்டார்.