கோலாலம்பூர்: பயங்கரவாத அமைப்புகளின் சமீபத்திய பட்டியலை பொதுமக்களின் குறிப்புக்காகவும் புரிதலுக்காகவும் வெளியிடுமாறு பிகேஆர் காவல் துறையிடம் கேட்டுக் கொண்டது.
நாட்டை அச்சுறுத்தும் எந்தவொரு வன்முறையையும் பிகேஆர் கட்சி தொடர்ந்து நிராகரிப்பதாக கட்சியின் தகவல் தொடர்பு இயக்குனர் பாஹ்மி பாட்சில் கூறினார்.
“பயங்கரவாதிகள் என வரையறுக்கப்பட்டுள்ள அமைப்புகள் அல்லது நம்பிக்கைகளின் சமீபத்திய பட்டியலை மலேசிய காவல் துறை தெளிவுபடுத்த வேண்டும். இதனால் மக்கள் அறிந்து கொள்ளவும், விழிப்புடன் இருக்கவும், அந்த அமைப்புகள் அல்லது சித்தாந்தங்களுடன் எந்தவொரு வடிவத்திலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் உதவலாம்,” என்று அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையதாக நம்பப்படும் 12 பேரின் கைதினை அடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 10-ஆம் தேதி முதல், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்பட்டு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 நபர்களை காவல் துறை கைது செய்துள்ளது.
புக்கிட் அமான் பயங்கரவாத தடுப்புப் பிரிவின்படி, பயங்கரவாத பட்டியலிடப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பொதுமக்களை ஊக்குவித்து தூண்டியது என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறியுது.
இதற்கிடையில், நேற்றிரவு வியாழக்கிழமை பிகேஆர் கட்சியின் அரசியல் பணியகம் கூட்டத்தில், பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 அல்லது சொஸ்மாவைப் பயன்படுத்துவதில் உடன்படவில்லை என்று பாஹ்மி கூறினார்.
சொஸ்மாவில் சில விதிகள் திருத்தப்பட வேண்டும் என்று பிகேஆர் கருதுவதாக அவர் கூறினார்.