Home One Line P2 உலகின் அதிக இலாபம் ஈட்டும் – ஆனால் குறைந்த அளவே சம்பளம் வழங்கும் – நிறுவனம்...

உலகின் அதிக இலாபம் ஈட்டும் – ஆனால் குறைந்த அளவே சம்பளம் வழங்கும் – நிறுவனம் எது தெரியுமா?

959
0
SHARE
Ad

ரியாத் – உலகிலேயே மிக அதிகமான இலாபம் ஈட்டும் நிறுவனமாகக் கருதப்படுவது சவுதி அரேபியாவின் அதிகாரபூர்வ எண்ணெய் வள நிறுவனமான அராம்கோ. உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் உற்பத்தியில் பத்தில் ஒரு பங்கை இந்த நிறுவனம்தான் உற்பத்தி செய்கிறது.

இந்த நிறுவனம் மூலம் கிடைக்கும் வருமானம்தான் சவுதி அரேபியாவின் அரச வாரிசுகளின் சொகுசு வாழ்க்கைக்கு வழிவகுத்துத் தருகிறது. இன்றைக்கு சவுதி அரச குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு 100 பில்லியனுக்கும் மேல் என வணிக ஊடகங்கள் மதிப்பிடுகின்றன.

சவுதி நாட்டின் பொருளாதார நிலைமையையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தியும் அராம்கோவுக்குத்தான் இருக்கிறது.

#TamilSchoolmychoice

ஆனால், அந்நிறுவனத்தின் இயக்குநர்களுக்கும், உயர் நிலை அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் ஊதியம் என்பது மற்ற பெரிய நிறுவனங்களோடு ஒப்பிடும்போது குறைவானதாகவே இருக்கிறது.

உயர்நிலை நிர்வாகம் மற்றும் இயக்குநர் வாரியத்தின் 17 பேர்கள் கடந்த ஆண்டு 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே தங்களின் வருமானமாகவும், சலுகைகளாகவும் பகிர்ந்து கொண்டனர். ஆனால், இவர்கள் இந்த வருமானத்தில் வரி செலுத்த வேண்டியதில்லை.

ஆனால் எக்சோன் மோபில், செவ்ரோன் போன்ற மற்ற எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் இயக்குநர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கிய ஊதியம் இதைவிடப் பன்மடங்கு அதிகம்.

அராம்கோவின் மதிப்பு 2 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது ஆயிரம் பில்லியனாகும்) என சவுதியின் அரச வாரிசு இளவரசர் முகமட் பின் சல்மான் மதிப்பிட்டுள்ளார்.

அராம்கோவின் கணிசமான பங்குகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வருகிறது. எதிர்வரும் டிசம்பர் 11-ஆம் தேதி அராம்கோ சவுதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.

அராம்கோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதைத் தொடர்ந்து கிடைக்கக் கூடிய வருமானத்தைக் கொண்டு, சவுதியில் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்க சவுதியின் ஆட்சியாளர் சல்மான் திட்டமிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மட்டும் அராம்கோ 111 பில்லியன் டாலர் இலாபத்தை ஈட்டியது. எக்சோன், செவ்ரோன், ஷெல், பீபி, டோட்டல் ஆகிய 5 முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் இணைந்து ஒட்டுமொத்தமாக ஈட்டிய இலாபத்தை விட அராம்கோவின் இலாபம் கூடுதலாகும்.