Home One Line P1 “ஐநா மன்றத்தில் முழங்கிய மலேசியத் தமிழர் டான்ஸ்ரீ சோமா” – டான்ஸ்ரீ குமரன்

“ஐநா மன்றத்தில் முழங்கிய மலேசியத் தமிழர் டான்ஸ்ரீ சோமா” – டான்ஸ்ரீ குமரன்

970
0
SHARE
Ad
டத்தோ சகாதேவனுக்கு மாலையணிவிக்கிறார் டான்ஸ்ரீ குமரன்

கோலாலம்பூர் – “மலேசியத் திருநாட்டை ஐநா மன்றத்தில் பிரதிநிதித்ததுடன் அந்தப் பன்னாட்டு பேரமைப்பில் முழங்கிய மலேசியத் தமிழர் என்ற சிறப்பிற்கும் உரிய பெருமகனார் டான்ஸ்ரீ கே. ஆர். சோமசுந்தரம் ஆவார். வாழும் வரலாறாகத் திகழ்கின்ற டான்ஸ்ரீ சோமா, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தை செம்மாந்த முறையில் வழிநடத்துவதுடன் இன்னும் பல்வேறு பெருமைக்கும் சிறப்புக்கும் உரியவர்” என்று சமூகவாதியும் தமிழிய சிந்தனையாளருமான டான்ஸ்ரீ குமரன் குறிப்பிட்டார்

நாடு விடுதலை அடைந்த 1957 ஆகஸ்ட் 31-ஆம் நாளில், தேசத் தந்தை துங்குவின் விருப்பத்திற்கு ஏற்ப மலாய், சீனம், தமிழ் ஆகிய மும்மொழிகளி-லும் சுதந்திர பிரகடனம் வாசிக்கப்பட்டது. அந்த வகையில், கூலிம் மாவட்டத்தில் மெர்டேக்கா பிரகடனத்தை தமிழ் மொழியில் வாசித்த பெருமைக்கு உரியவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா என்று ‘டான்ஸ்ரீ சோமா’ என்னும் ஆங்கில நூல் வெளியீட்டு விழாவில் மேனாள் துணை அமைச்சருமான குமரன் பேசினார்.

அண்மையில் தலைநகரில் வெளியீடு கண்ட இந்த ஆங்கில நூலில் பல்துறைசார் வல்லுநர்கள், பெருமக்கள், கல்விமான்கள், அமைச்சர் பெருமக்கள், ஆன்மிகத் தலைவர்கள், கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானவர்கள் தத்தம் கோணத்திலும் தம்மால் டான்ஸ்ரீ சோமா அவர்களை அறிந்த வகையிலும் கட்டுரைப் படைத்துள்ளனர். இதில், 35-க்கும் மேற்பட்ட கவிப்பெருமக்கள் புனைந்த படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.

#TamilSchoolmychoice

2011-ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தத் தமிழ்ப் படைப்புதான் இப்பொழுது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதில், டான்ஸ்ரீ சோமா அவர்களைப் பற்றிய ஏராளமான தகவல்கள், குறிப்பாக சுதந்திர வேட்கையில் இந்திய தேசிய இராணுவப் படையில் சேர்ந்தது, நாடு விடுதலை பெற்ற வேளையில் பல தருணங்களில் இவராற்றிய பங்கு, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தை உருவாக்கியதில் இவரின் பெரும்பங்கு, அதைவிட சீன, மலாய்த் தலைவர்களுடன் இணைந்து இவர் ஆற்றிய பல பணிகள் என்றெல்லாம் எடுத்துச் சொல்ல இயலா அளவிற்கு இந்த நூலில் தகவல்கள் பொதிந்துள்ளன.

டான்ஸ்ரீ சோமா அவர்களைப் பற்றி மற்ற மொழியினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தலைநகர் ‘தமிழவேள் கோசா அறவாரிய’த்தின் சார்பில் மொழிபெயர்க்கப்பட்டு, அதை அதே அறவாரியத்தின் சார்பில் வெளியிட்ட வேளையில் அவ்வறவாரியத்தின் தலைவருமான டான்ஸ்ரீ குமரன், கூட்டுறவுக் காவலரும் இலக்கியக் காவலருமான டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரத்தின் பெருமைகளைப் பற்றி உணர்ச்சி பொங்க பேசினார்.

ம.இ.கா.வில் கெடா மாநில துணைத் தலைவராகப் பணியாற்றியது, மலேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக செயல்பட்டது, மொழி-இலக்கிய பாதுகாப்பிற்கும் கலை மற்றும் இசை மேம்பாட்டிற்கும் என தனித்தனியே ஒவ்வொரு கோடி வெள்ளியில் அறவாரியம் அமைத்தது, மேலை நாட்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்காக ஒரு கோடி ரூபாய் அளித்தது உள்ளிட்ட சிறப்பையெல்லாம் எடுத்துரைத்தார்.

கோசா அறவாரிய செயலாளர் வைர கணபதி வரவேற்புரை ஆற்றிய இந்த நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரியும் இலக்கிய தாகம் மிக்கவருமான டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன், இணைப் பேராசிரியர் கிருஷ்ணன் மணியம், கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிருவாகி டத்தோ பா. சகாதேவன் ஆகியோரும் டான்ஸ்ரீ சோமா அவர்களைப் பற்றியும் அவரின் சிறப்பு குறித்தும் எடுத்துரைத்தனர்.

நிறைவாக, டத்தோ சகாதேவனும் டான்ஸ்ரீ குமரனும் நூலை வெளியிட்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் இலவயமாகவே இந்த நூலை வழங்கினர். இரவு உணவு உபசரிப்பும் இடம் பெற்ற இந்த இலக்கிய நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கப் பொறுப்பாளர்கள், தமிழறிஞர்கள், சமூக இயக்கங்களின் தலைவர்கள், உள்ளிட்ட ஏராளமான தமிழார்வலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

பகாங், சபாய் சட்டமன்ற உறுப்பினர் திருமதி து.காமாட்சியும் இதில் கலந்து கொண்டார்.