கோலாலம்பூர்: 17,500 ரிங்கிட் பணத்தை கையூட்டாகப் பெற்றதாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கோலகுபு பாரு அமர்வு நீதிமன்ற முன்னாள் நீதிபதி, முன்னாள் துணை அரசு தரப்பு வழக்கறிஞர், மற்றும் ஒரு வழக்கறிஞரும் மறுத்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை அவர்களுக்கு எதிரான கையூட்டு வழக்கு நீதிபதி ரோசிலா சாலே முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
ஏழு சட்டவிரோத அந்நிய நாட்டினருக்கு அபராதத்தை விதிக்காமல் இருப்பதற்காக 17,500 ரிங்கிட்டை கையூட்டாகப் பெற்ற கோலகுபு பாரு அமர்வு நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஸ்மில் முஸ்தாபா அபாஸ் மற்றும் முன்னாள் துணை அரசு வழக்கறிஞர் கைருல் யுஸ்ரி முகமட் ஷா அலாம் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டனர்.
இவ்விருவருடன் கூட்டாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கறிஞர் நூர் அமிருல் நஸ்ரின் இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணை கோரினர்.
நீதிபதி ரோசிலா குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 12,000 ரிங்கிட் பிணை அனுமதித்து, அவர்களின் கடப்பிதழ்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கு வருகிற டிசம்பர் 16-ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.