கோலாலம்பூர்: பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா) தடுப்புக் காவல் காலத்தை 28 நாட்களில் இருந்து 14 நாட்களாகக் குறைப்பதற்கான முன்மொழிவு குறித்து விரிவான ஆய்வு தேவைப்படுகிறது என்று மலேசிய காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சிறப்பு விசாரணை மற்றும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று துணை காவல் துறைத் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் தெரிவித்தார்.
இருப்பினும், சொஸ்மா தடுப்புக் காவலுக்கு பொருத்தமான காலத்தை அவர் வெளியிடவில்லை.
“தடுப்புக் காவல் காலம் முன்மொழிவு கட்டத்தில் உள்ளது. அதை நாம் பின்னர் கவனிக்க வேண்டும். சில விவாதங்கள் மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்” என்று அவர் நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, தற்போதைய 28 நாள் தடுப்புக் காவல் மிக நீளமாக இருப்பதாக சிலர் கருதுவதாகவும், அது சுருக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் நேற்று கூறினார்.
எவ்வாறாயினும், காவல் துறை போன்ற அமலாக்கத்தின் சார்பாக, அவர்களின் விசாரணைகளுக்கு, எடுத்துக்காட்டாக பயங்கரவாத வழக்குகளுக்கு, அதிக நேரம் தேவைப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.