ஜோகூர் பாரு: பெர்சாத்து கட்சிக்கும் ஜசெக கட்சிக்கும் இடையில் எவ்விதமான அதிருப்தியும் இல்லை என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ டாக்டர் சஹாருடின் ஜமால் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கைக் கூட்டணியின் கூட்டணிக் கட்சிகளான பெர்சாத்து மற்றும் ஜசெக அடிமட்ட உறவுகள் நல்ல நிலையில் உள்ளதாகவும், தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்காக ஒத்துழைப்பைப் பேணுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜசெகவின் உயர் தலைமை, கட்சி ஆலோசகர் லிம் கிட் சியாங் மற்றும் ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோரும் இந்த பிரச்சாரக் களத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளதாக சஹாருடின் தெரிவித்தார்.
“தற்போதைக்கு மிக முக்கியமாக, நாம் தஞ்சோங் பியாய் மீது கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, குவான் எங் பிரச்சாரத்திற்காக ஜசெக மத்தியில் சில அதிருப்திகள் இருப்பதாக ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், இந்த விவகாரத்தை கையாள முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தின் போது இலவச சிம் அட்டை வழங்கப்பட்டது குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.