Home One Line P1 தஞ்சோங் பியாய் : இறுதிக் கட்டத்தில் பக்காத்தானுக்குக் கூட்டத்தைத் திரட்டிய அன்வார்

தஞ்சோங் பியாய் : இறுதிக் கட்டத்தில் பக்காத்தானுக்குக் கூட்டத்தைத் திரட்டிய அன்வார்

676
0
SHARE
Ad

பொந்தியான் – எதிர்வரும் நவம்பர் 16-ஆம் நடைபெறவிருக்கும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான பரப்புரை தொடங்கியது முதல் பக்காத்தான் ஹரப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியினர் எதிர்நோக்கி வந்த பிரச்சனை அவர்களின் கூட்டங்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே பொதுமக்கள் திரண்டதுதான்!

மாறாக, மசீச-தேசிய முன்னணி கூட்டங்கள் ஆயிரக் கணக்கானோரை ஈர்த்து,  அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு, நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளின் ஆதரவாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தன.

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி தோற்றுவிடும் என்ற ஆரூடங்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், அவர்களின் பரப்புரைக் கூட்டங்களுக்கும் போதுமான அளவில் கூட்டம் திரளாத நிலையில், நேற்று இறுதிக்கட்டப் பரப்புரைக்காக களமிறங்கிய அன்வார் இப்ராகிம் சற்றே நிலைமையை மாற்றி, நம்பிக்கைக் கூட்டணி வேட்தாளர் கர்மாயினுக்கும், நம்பிக்கைக் கூட்டணி ஆதரவாளர்களுக்கும்  சற்று நம்பிக்கைகையை ஏற்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (நவம்பர் 12) அன்வாரின் பரப்புரைக் கூட்டத்திற்கு திரளான மக்கள் திரண்டனர். இதுவரை நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி பரப்புரைகளிலேயே அன்வாருக்குத்தான் அதிக அளவில் மக்கள் திரண்டனர் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன வாக்காளர்களின் வாக்கு மசீசவுக்கும், தேசிய முன்னணிக்கும் திசை திரும்பும் எனக் கூறப்படும் வேளையில் நடப்பு அரசாங்கத்தில் குறைபாடுகள் உள்ளன என்பதை ஒப்புக் கொண்ட அன்வார் ஒரு சில மலாய் தலைவர்கள் அம்னோ தலைவர்களைவிட ஆதிக்கத் தன்மையோடு நடந்து கொள்வதையும் மறுக்கவில்லை.

இருப்பினும் நிலைமையை மாற்ற தங்களுக்குக் கால அவகாசம் தேவைப்படுவதாக அன்வார் தனது உரையில் கூறினார்.

அம்னோ-பாஸ் கூட்டணியால் மலாய் வாக்குகள் தேசிய முன்னணி பக்கம் திரும்பும் என்ற ஆரூடம் பரவி வரும் வேளையில் நம்பிக்கைக் கூட்டணியின் நடவடிக்கைகளால் அதிருப்தி கொண்டுள்ள சீன வாக்காளர்கள் ஜசெகவுக்குத் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தேசிய முன்னணிக்கே வாக்களிப்பார்கள் என களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

மகாதீரும் இறுதிக் கட்டப் பிரச்சாரத்திற்காக நேற்று புதன்கிழமை தஞ்சோங் பியாய் வந்து நம்பிக்கைக் கூட்டணி கட்சிப் பொறுப்பாளர்களிடையே சந்திப்பு ஒன்றை நடத்தினார். தொடர்ந்து பிரச்சாரக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.