கோலாலம்பூர் – 1எம்டிபி வழக்கில் மலேசியாவில் தேடப்படும் குற்றவாளியான ஜோ லோ என்ற லோ தெக் ஜோ இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு வருகை தந்தார் என்றும் அவர் மீது இண்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல் துறையின் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு இருக்கும் நிலையிலும் அவரை நாட்டிற்குள் இந்திய அரசாங்கம் அனுமதித்தது என்றும் பரபரப்பான தகவல்களை ஆசியா டைம்ஸ் இணைய ஊடகம் வெளியிட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்டிருக்கும் இந்த செய்தியைத் தொடர்ந்து அதனை மலேசியக் காவல் துறைத் தலைவர் அகமட் பாடோர் மறுத்துள்ளார்.
எனினும் ஆசியா டைம்ஸ் செய்தியின்படி, இந்தியாவின் அகமதாபாத் நகரில் மூன்று நாட்கள் தங்கிவிட்டு, அங்கிருந்து கடந்த நவம்பர் 5-ஆம் தேதி ஒரு தனியார் விமானம் மூலம் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, துபாய் நோக்கி ஜோ லோ பயணப்பட்டார் என்றும் ஆசியா டைம்ஸ் தெரிவித்தது.
இந்தப் புதிய தகவல்கள் உண்மையானால் அதன் மூலம் இந்தியாவுக்கும், மலேசியாவுக்கு இடையில் புதிய வெளியுறவு மோதல்கள் தொடங்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்தியா நாடு கடத்தக் கோரும், பயங்கரவாதக் குற்றங்களுக்காகத் தேடப்படும் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம் என மலேசிய வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா உறுதியுடன் தெரிவித்த சில நாட்களுக்குள் இந்தப் புதிய தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையில் நிலவும் வெளியுறவுக் கொள்கைகளில் காணப்படும் முரண்பாடுகளை ஜோ லோ அரசியல் காய் நகர்த்துவது போல் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் என்றும் கருதப்படுகின்றது.
ஜோ லோவின் நடமாட்டங்களை உள்ளூர் காவல்துறையின் கண்காணித்து வந்தாலும், அவரைக் கைது செய்யவோ, தடுத்து வைக்கவோ முற்படவில்லை என்றும் ஆசியா டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
ஜோ லோ பயணம் செய்த தனியார் விமானத்தின் விவரங்கள், அந்த விமானத்தை வாடகைக்கு அமர்த்திய நிறுவனம் உள்ளிட்ட விவரங்களையும் ஆசியா டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
எனினும் அந்த செய்தியின் உள்ளடக்கங்களை சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனம் மறுத்துள்ளது.
ஜோ லோ மீது கடந்த ஆண்டு ஜூன் மாதம் மலேசியாவும், சிங்கப்பூரும் கைது ஆணைகளைப் பிறப்பித்ததோடு, அனைத்துலகக் காவல் துறையிடம் (இண்டர்போல்) சிவப்பு அட்டை எச்சரிக்கையையும் சமர்ப்பிக்கப்பட்டது.