கோலாலம்பூர்: அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 மில்லியன் மரங்களை நடவு செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் நேற்று புதன்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.
அவ்வனைத்து மரங்களுக்கும் மூன்று வருட காலப்பகுதியில் ஒரு ஹெக்டேருக்கு 48,000 ரிங்கிட் செலவில் தீவிரமான பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
“காடுகளில் ஒரு மரத்தை நடவு செய்வது எளிதானது அல்ல, ஏனெனில் அதை பராமரிக்க மூன்று ஆண்டுகள் ஆகும். நாங்கள் அதை நடவு செய்து, அது ஒரு பெரிய மரமாக மாறுவதற்கு முன்பு மூன்று முதல் நான்கு மீட்டர் உயரத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.”
“ஆனால் அதற்கு முன்னர், நாம் அதனை கட்டுப்படுத்தவும் உரமிடவும் வேண்டியுள்ளது. 11-வது மலேசியா திட்டத்தில் அரசாங்கம் ஒதுக்கீடு செய்த 150 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து, நாம் சில ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் நடவு செய்துள்ளோம். அந்த நிதியில் பாதி பயிர் ஒழுங்குமுறைக்காகப் பயன்படுத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.
இதை ஒரு வெற்றிகரமான முயற்சியாக மாற்ற பெருநிறுவன மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்ற பல்வேறு தரப்புகளின் ஒத்துழைப்பும் தேவைப்படுவதாக டாக்டர் சேவியர் கூறினார்.