பாரிஸ்: 300 மலேசிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு முழு உதவித்தொகையை வழங்க உள்ளதாக கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார மாநாட்டின் (யுனெஸ்கோ) 40-வது அமர்வில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இந்த விவகாரத்தை அவருக்கு முன்வைத்ததாகக் கூறினார்.
அச்சந்திப்பானது ஆக்கபூர்வமான மற்றும் பலனளிக்கும் வகையில் இருந்ததாக மஸ்லீ தெரிவித்தார். இந்தியாவில் பல்வேறு துறைகளில் கல்வி கற்க, மாணவர்களுக்கான இந்தியா ஆய்வுகள் திட்டத்தின் கீழ் 200 உதவித்தொகைகள் அடங்கியுள்ளன என்றும், மீதமுள்ளவை தங்கள் மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பாடத்தைத் தொடர்வதற்காக 100 முதுகலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
“இந்திய அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களுடனான இச்சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக உள்ளது. உயர் கல்வியில் மலேசியா–இந்தியா ஒத்துழைப்பை புதுப்பிக்க இந்தியா விரும்புவது மட்டுமல்லாமல், இந்த துறையில் நெருக்கமான ஒத்துழைப்பையும் உருவாக்க முனைப்புக் காட்டுகிறது” என்று அவர் அச்சந்திப்பிற்குப் பிறகு பெர்னாமாவிடம் கூறினார்.