
கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சொஸ்மா 2012) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பூமுகன் மகாலிங்கத்தின் சகோதரி நேற்றிரவு வியாழக்கிழமை புக்கிட் அமான் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டராக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
இரவு 7.30 மணியளவில் செபெராங் பெராயில் உள்ள புக்கிட் தெங்கா காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டதாக பூமுகனின் அக்காள் பொன்னழகி தெரிவித்தார்.
“அவர்கள் அற்ப விஷயங்களுக்காக 90 நிமிடங்கள் என்னிடம் கேள்வி எழுப்பினர். என் சகோதரர் ஏற்கனவே நீதிமன்றத்தில் இருக்கிறபோது, அவர்கள் ஏன் என்னை கேள்வி கேட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.
32 வயதான தொழிற்சாலை தொழிலாளி பிகேஆர் புக்கிட் தெங்கா சமூக சேவை மையத்தில் செய்தியாளர் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.
பூமுகனின் தாயாரான 60 வயது, இராணி தண்ணிமலை பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது, தனது மகன் எந்த தவறும் செய்யவில்லை என்று கண்ணீருடன் கூறியதாக மலேசியாகினி தெரிவித்தது.
ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றிய 29 வயதான பூமுகன், பயங்கரவாதக் குழுவுக்கு ஆதரவளித்ததாக தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
இதற்கிடையில், விடுதலை புலிகள் தளபதியின் உருவம் பொதித்திருந்த ஒரு சட்டையை வைத்திருந்ததற்காக பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்காக பூமுகன் குற்றம்சாட்டப்பட்டுள்ளதை பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் (புக்கிட் தெங்கா) கூய் ஹ்சியாவ் லியுங் கேள்வி எழுப்பியுள்ளார்.
பூமுகன், தனது கைபேசி மற்றும் முகநூலில் விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் சில படங்கள் மற்றும் காணொளிகளை மட்டுமே பகிர்ந்துள்ளார்.
“பூமுகனுக்கு எதிராக அரசு தரப்பு வைத்திருக்கும் எல்லா ஆதாரங்களும் இதுவாக இருந்தால், ஆயுள் தண்டனையை அனுபவிக்கும் மிகக் கடுமையான குற்றங்களுடன் அவரை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதன் வாயிலாக அது மிகப்பெரிய பிழையைச் செய்துள்ளது என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.