கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை நிர்ணயிக்கப்பட்ட 1எம்டிபியின் இறுதி கணக்கறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணையை ஒத்திவைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தோல்வியடைந்தார்.
முன்னாள் 1எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தாவுடன் இன்று திங்கட்கிழமை இருவரும் வழக்கினை சந்திக்க உள்ளனர்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் ஜெய்னி மஸ்லான் இன்று காலை தொடங்கிய விசாரணையின் போது இந்த விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டதாக தீர்ப்பளித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை, நீதிமன்றம் நஜிப்பின் வழக்கறிஞர் குழுவின் விண்ணப்பத்தை கேட்டதுடன், முன்னாள் பிரதமர் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட்டின் வழக்கு தொடர்பான மற்றொரு விசாரணையில் தயார்படுத்துவதற்கு இந்த வழக்கினை தாமதப்படுத்த வேண்டும் என்று வாதிட்டனர்.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது, நம்பிக்கை மீறல் மற்றும் 42 மில்லியன் மதிப்புள்ள பணத்தை மாற்றியமைத்ததாக நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 3-ஆம் தேதி முதல் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், நஜிப்பின் வழக்கு தாமதப்படுத்தும் கோரிக்கை அருள் கந்தாவிடமிருந்தும், ஆட்சேபனைகளைப் பெற்றது.
கடந்த ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி 1 எம்டிபி இறுதி கணக்கறிக்கையில் திருத்தம் செய்ததற்காக நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் கோலாலம்பூர் கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு பின்னர் மார்ச் மாரம் 14-ஆம் தேதியன்று உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
1எம்டிபி இறுதி கணக்கறிக்கையை தேசிய பொது கணக்காய்வாளர் குழுவில் (பிஏசி) தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் அதைத் திருத்துவதற்கு நஜிப் தனது நிலைப்பாட்டைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் அம்னோ தலைவரான அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 22 மற்றும் 26-ஆம் தேதிகளில், பிரதமர் துறை வளாகத்தில், இக்குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-இன் பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், கையூட்டின் அளவு அல்லது அதைவிட ஐந்து மடங்கு குறையாத அபராதமும் விதிக்கப்படும்.