ஜோகூர் பாரு: இங்குள்ள ஜோகூர் பாரு நாடாளுமன்ற மக்கள் சேவைமையத்தின் நுழைவாயிலில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த சம்பவத்தில் சிவப்பு சாயமும் இறந்த கோழியும் வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் அக்மால் நஸ்ருல்லா முகமட் நாசீர் கூறுகையில், கோழியின் சடலம் ஒன்று, அச்சுறுத்தும் செய்தியுடன் நுழைவாயிலில் வீசப்பட்டதாகக் கூறினார்.
காலை 7.20 மணியளவில் அலுவலகத்திற்குள் நுழையவிருந்தபோது இந்த சம்பவம் குறித்து மைய ஊழியர்கள் அறிந்ததாக அவர் கூறினார்.
“எனது அலுவலகரால் காவல் துறையில் புகார் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையை நடத்துவதற்காக நான் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன், ”என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தெற்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷாஹுரைன் ஜாய்ஸ் பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.
“இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது” என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, பிகேஆர் கட்சிக்குள் ஏற்பட்டு வரும் கருத்து மோதல்கள் தற்போது அச்சுறுத்தும் நிலையை அடைந்துள்ளது. பிகேஆர் இளைஞர் அணி காங்கிரஸ் கூட்டத்தை தொடக்கி வைக்க அஸ்மின் அலிக்கு அழைப்பு கொடுக்கப்படாததால், பிகேஆர் உறுப்பினர்களுக்கிடையே பிளவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.