கோலாலம்பூர்: டிசம்பர் 5-ஆம் தேதி தங்கள் சொத்துகளை அறிவிக்க மறுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையை அவமதித்ததாகக் கருதப்படலாம் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ லியூ வுய் கியோங் கூறினார்.
நாடாளுமன்ற உத்தரவின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1,000 ரிங்கிட் அபராதம் அல்லது மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்படலாம் என்றும் அவர் கூறினார்.
“அவர்களுக்கு போதுமான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்கள் சொத்து அறிவிப்பை தாக்கல் செய்ய மறுக்கிறார்கள். எனவே சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும், ”என்று அவர் இன்று புதன்கிழமை கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் சொத்துகளை அறிவித்துள்ள நிலையில், எந்தவொரு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் தங்கள் சொத்துகளை அறிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து அறிவிப்புக்கான முதல் காலக்கெடு கடந்த அக்டோபர் 1-ஆம் தேதியாகும். பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகளின் சொத்துகளை அறிய மக்களுக்கு உரிமை உண்டு என்று லியூ கூறினார்.
“நீங்கள் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்பியவுடன், உங்கள் தகவல்கள் பொதுவில் இருக்கும். இனி இரகசியம் இல்லை. இது மலேசியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடக்கிறது,”என்று அவர் கூறினார்.