Home One Line P1 கிமானிஸ் நாடாளுமன்றத்திற்கு விரைவில் இடைத்தேர்தல்!

கிமானிஸ் நாடாளுமன்றத்திற்கு விரைவில் இடைத்தேர்தல்!

783
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெறக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. 2018 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் வரிசையில் கிமானிஸ் நாடாளுமன்ற இடைத் தேர்தல் பத்தாவது இடைத் தேர்தலாகும்.

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெறும் இந்த இடைத் தேர்தலில் அம்னோ மீண்டும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிமானிஸ் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஶ்ரீ அனிபா அமானின் வெற்றி இரத்து செய்யப்பட்டதை நிலைநிறுத்துவதாக, கூட்டரசு நீதிமன்றம் (பெடரல் கோர்ட்) இன்று திங்கட்கிழமை தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் விரைவில் இடைத் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

தேர்தல் நீதிமன்றம் கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் முடிவை இரத்து செய்த தனது முடிவில் எந்த தவறும் செய்யவில்லை என்று கூட்டரசு நீதிமன்றம் ஒருமனதாக, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான அமர்வு, தேர்தலின் போது பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்ட மீறல்கள் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் அத்தொகுதியின் தேர்தல் முடிவைப் பாதித்துள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.

14-வது பொதுத் தேர்தலில் கிமானிஸ் தொகுதியில் வாரிசான் வேட்பாளரை தோற்கடித்து அனிபா 156 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.

கடந்த அக்டோபர் 16-ம் தேதி, கோத்தா கினபாலு தேர்தல் நீதிமன்றம், முன்னாள் வெளியுறவு அமைச்சரான அனிபாவின் வெற்றி செல்லாது என்று அறிவித்திருந்தது.

இதற்கிடையில் இடைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அனிபா அமான் கோடி காட்டியுள்ளார்.

கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு அதிகாரபூர்வமாகக் கிடைத்ததும் கிமானிஸ் இடைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்வோம் என மலேசியத் தேர்தல் ஆணையர் அசார் அசிசான் ஹருண் அறிவித்துள்ளார்.