மாஸ்கோ – இன்று திங்கட்கிழமை தொடங்கப்பட்ட ரஷியா-சீனா இடையிலான புதிய எரிவாயு பரிமாற்றத் திட்டத்தின் மூலம் இருநாடுகளுக்கும் இடையில் புதிய வணிக ரீதியிலான அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் சைபீரியா பகுதியிலுள்ள – சீனாவின் எல்லைக்கு அருகில் உள்ள – பிளாகோவெஸ்ஷென்ஸ்க் என்ற இடத்திலிருந்து, சீனா நாட்டுக்குள் கொண்டு செல்லப்படும் எரிவாயுத் திட்டம் 55 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. சைபீரியாவில் எரிவாயு உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் இருந்து, சுமார் 1,865 மைல் நீளம் கொண்ட இராட்சத குழாய்கள் மூலம் இந்த எரிவாயு சீனாவின் எல்லைப் பகுதி வரை கொண்டு செல்லப்படுகிறது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புடினும், சீன அதிபர் ஜீ ஜின் பெங்கும் காணொளி (வீடியோ) தொடர்பு மூலம் இந்தத் திட்டத்தை இன்று அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தனர்.
சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வணிகப் போர் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், சீனாவும் ரஷியாவும் வெளியுறவுக் கொள்கைகளில் பல முனைகளில் நெருக்காக இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன என்பதற்கு உதாரணமாக இந்த எரிவாயு பரிமாற்றத் திட்டம் திகழ்கிறது.
அதிகரித்து வரும் உற்பத்தித் தொழில்கள் காரணமாக சீனாவுக்குத் தேவைப்படும் எரிவாயு தேவையை இந்தத் திட்டம் பூர்த்தி செய்கிறது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு 400 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய எரிவாயு இந்தத் திட்டத்தின் மூலம் சீனாவுக்குள் கொண்டு செல்லப்படும்.
பின்னர் சீனா தனது நிலப்பகுதியில் சுமார் 3,175 மைல்கள் நீளத்திற்கு இந்த எரிவாயுவைக் குழாய்கள் மூலம் தேவைப்படும் தொழிற்பேட்டைகளுக்குக் கொண்டு செல்லும்.