கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை ஒன்பது நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான நியமனக் கடிதத்தை வழங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா, அதிகமான பெண்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளது தமக்கு பெருமையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ ரோஹனா யூசுப், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மற்ற மூன்று நீதிபதிகள் டத்தோ ஜலேஹா யூசுப், டத்தோ சபரியா முகமட் யூசுப் மற்றும் டத்தோ ஹஸ்னா முகமட் ஹாஷிம் ஆகியோர் கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதிகளாகவும், உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ ஹட்ஹாரியா சைட் இஸ்மாயில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளாக டத்தோ அபுபக்கார் ஜாய்ஸ் மற்றும் நந்தபாலன் மூர்த்தி இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டத்தோஶ்ரீ துன் அப்துல் மாஜித் துன் ஹம்சா மற்றும் டத்தோ அஸ்மி அப்துல்லா இருவரும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
நீதித்துறையில் பெண்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதில் நாட்டின் நிர்வாகத்தின் முயற்சிகள் மற்றும் அக்கறையை பிரதிபலிக்கும் வகையில் பல பெண் நீதிபதிகளை நியமிப்பதில் சுல்தான் அப்துல்லா பெருமைப்படுவதாக அரண்மனை மேலாளர் டத்தோ அகம்ட பாட்சில் ஷாம்சுடின் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.