கோலாலம்பூர்: பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ தாஜுடின் அப்துல் ரஹ்மான் நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சலுகைகள் குழுவின் பார்வைக்கு கொண்டு செல்லப்படுவார் என்று நேற்று வியாழக்கிழமை மக்களவையில் தீர்மானிக்கப்பட்டது.
சின் பெங்கின் தகனச் சாம்பலை ஆர்எஸ்என் ராயரின் நெற்றியில் இருக்கும் திருநீறுடன் இணைத்துப் பேசியதற்கு அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மனிதவளத்துறை அமைச்சர் எம்.குலசேகரன் நேற்று மக்களவைக் கூட்ட முடிவில், கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி தாஜுடினின் கருத்துகள் இந்து மக்களின் உணர்வுகளை மற்றும் மதத்தை கடுமையாக அவமதிப்பதாகக் குறிப்பிட்டார்.
“அவர் இந்துக்களை புண்படுத்தியுள்ளார். மேலும் இந்த உன்னத மண்டபத்தின் நற்பெயரையும் களங்கப்படுத்தியுள்ளார்.”
“அதனைக் கருத்தில் கொண்டு தாஜுடின் அவர்கள் நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சலுகைகள் குழுவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, மக்களவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து தாஜுடின் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.