Home நாடு “எம்ஜிஆரைப் பிரிந்ததை எண்ணி வருத்தப்பட்டிருக்கிறீர்களா?” – வைரமுத்து கேள்விக்கு கலைஞர் கருணாநிதி தந்த பதில் என்ன?

“எம்ஜிஆரைப் பிரிந்ததை எண்ணி வருத்தப்பட்டிருக்கிறீர்களா?” – வைரமுத்து கேள்விக்கு கலைஞர் கருணாநிதி தந்த பதில் என்ன?

1379
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் தனது ‘தமிழாற்றுப் படை’ நூல் அறிமுக விழாவில் கலந்து கொண்டு ஏற்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து ஏறத்தாழ ஒரு மணி நேரம் பல்வேறு சுவையான, சுவாரசியமானத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

மறைந்த கலைஞர் கருணாநிதியுடன் தான் கொண்டிருந்த நெருக்கமான நட்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய வைரமுத்து, அவரைச் சந்தித்த காலங்களில் அவரது பழைய படங்களில் அவர் எழுதிய அழகான வசனங்களை அவருக்கு நினைவூட்டி வந்ததாகவும் அவ்வாறு நினைவூட்டும் போதெல்லாம் கலைஞர் பெரும் மகிழ்ச்சி அடைவார் என்றும் வைரமுத்து தெரிவித்தார்.

கலைஞரின் வாழ்நாளை அத்தகைய மகிழ்ச்சியான தருணங்கள் நீட்டித்தன என தான் கருதுவதாகவும் கூறிய வைரமுத்து தொடர்ந்து கலைஞருடனான ஒரு சுவாரசியமான சம்பவத்தை விவரித்தார்.

#TamilSchoolmychoice

“ஒருமுறை நான் கலைஞரிடம் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன், கோபித்துக் கொள்ள மாட்டீர்களே என்று கூறிவிட்டுக் கேட்டேன். எம்ஜிஆர் உங்களைப் பிரிந்ததை எண்ணியோ, அல்லது நீங்கள் எம்ஜிஆரைப் பிரிந்ததை எண்ணியோ எப்போதாவது வருத்தப்பட்டிருக்கிறீர்களா” என்ற வைரமுத்து தொடர்ந்தார்.

“கண்ணாடியைத் தூக்கி என்னைப் பார்த்த கலைஞர் கூறினார்: இல்லை எப்போதும் நான் வருத்தப்பட்டதில்லை. மாறாக பல தருணங்களில் சந்தோஷப்பட்டிருக்கிறேன். காரணம், எனக்கும், திமுகவுக்கும் எதிராக கட்டமைக்கப்பட்ட அரசியல் வெற்றிடத்தை அவர்தான் நிரப்பினார். அவர் அவ்வாறு நிரப்பியிருக்காவிட்டால், திமுகவுக்கு எதிரான அரசியல் களத்தை திராவிடப் பாரம்பரியம் அல்லாத இன்னொரு கட்சி நிரப்பியிருக்கக் கூடும். ஆனால் அவ்வாறு நடக்காமல், திராவிடப் பாரம்பரியத்தில் வந்த எம்ஜிரே, திமுகவைத் தோற்றுவித்த அண்ணாவின் பெயரால் கட்சி ஆரம்பித்து திமுகவுக்கு எதிரான அரசியல் களம் அமைத்ததில் எனக்கு மகிழ்ச்சிதான் என்று கூறினார் கலைஞர்” என்று முடித்தார் வைரமுத்து.

“இந்தத் தகவலை நான் யாரிடமும் கூறியதில்லை. ஒரே ஒரு முறை தமிழகத்தில் சொல்லியிருக்கிறேன், இப்போது மலேசியத் தமிழர்களான உங்கள் முன்னிலையில் சொல்கிறேன்” என்றும் வைரமுத்து தனதுரையில் குறிப்பிட்டார்.