Home நாடு தாஜூடின் : “சாஹிட்டுடன் எனக்குப் பிரச்சனையில்லை. ஆனால்…”

தாஜூடின் : “சாஹிட்டுடன் எனக்குப் பிரச்சனையில்லை. ஆனால்…”

1100
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அம்னோவின் தேர்தல் இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் தாஜூடின் அப்துல் ரஹ்மான் சாஹிட் ஹாமிடி மீது தனக்குப் பிரச்சனை ஏதும் இல்லை, ஆனால் அவருக்கு என்மீது பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

அம்னோவின் தேர்தல் இயக்குநராக இதுவரை செயல்பட்டு வந்த பாசிர் சாலாக் (பேராக்) நாடாளுமன்ற உறுப்பினர் தாஜூடின் அப்துல் ரஹ்மான் நேற்று திங்கட்கிழமை (ஜூலை 13)  அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அம்னோவின் தேசியத் துணைத் தலைவர் முகமட் ஹாசான் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

முகமட் ஹாசான் தேசிய முன்னணியின் துணைத் தலைவருமாவார். முகமட் ஹாசான் அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் வியூகக் கட்டளை மையத்தின் (WAR ROOM) தலைவருமாவார்.

முகமட் ஹாசான்
#TamilSchoolmychoice

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிக்கும் தாஜூடின் அப்துல் ரஹ்மான் மாற்றப்பட்டிருப்பது அம்னோவுக்குப் பயன்தரும் ஓர் அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய நியமனத்தை அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி அறிவித்தார்.

இதன் தொடர்பில் ஊடகம் ஒன்றில் கருத்துரைத்த தாஜூடின் “இப்போது நிம்மதியாக இருக்கிறேன், எனக்கு யார் மீதும் ஆத்திரமில்லை. நான் மனமுடைந்து போகவுமில்லை” எனக் கூறியிருக்கிறார்.

அதிகரிக்கும் முகமட் ஹாசானின் செல்வாக்கு

இந்தப் புதிய நியமனத்தின் மூலம் முகமட் ஹாசானின் செல்வாக்கும், ஆதிக்கமும் அம்னோவில் தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது.

தேசிய முன்னணியின் துணைத் தலைவர், அம்னோவின் துணைத் தலைவர் என்ற முறையில் முகமட் ஹாசான் மேலும் சிறப்புடன் அம்னோவின் தேர்தல் இயக்குநர் பொறுப்பை வகிக்க முடியும் எனக் கருதப்படுகிறது.

முகமட் ஹாசானின் நியமனம் கட்சிக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் சாஹிட் ஹாமிடி தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பரில் தேர்தல் இயக்குநராக  நியமிக்கப்பட்ட தாஜூடின் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வந்தார். அம்னோவின் தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லானையே அண்மையில் தாஜூடின் சாடியிருந்தார்.

இன்னொரு காணொலியில் தாஜூடின், அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடியையும் தேசியக் கூட்டணிக்கான ஆதரவை மீட்டுக் கொள்ளும் விவகாரத்தில் குறை கூறியிருந்தார்.