பெங்களூரு – கர்நாடகப் பிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி திங்கட்கிழமை (டிசம்பர் 9) அறிவிக்கப்பட்ட 15 சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான முடிவுகளில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து அம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மிகக் குறுகியப் பெரும்பான்மையில் ஆட்சியில் நீடித்துக் கொண்டிருந்த பி.எஸ்.எடியூரப்பாவின் அரசாங்கம் பெரும்பான்மையில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள 7 தொகுதிகள் மட்டுமே அதற்குத் தேவைப்பட்டது. ஆனால், 12 தொகுதிகளில் வென்றிருப்பதன் மூலம் உறுதியானப் பெரும்பான்மையை பாஜக பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் காரணமாக 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்தில் 118 தொகுதிகளை பாஜக கொண்டுள்ளது. ஒரு சுயேச்சை உறுப்பினரின் ஆதரவும் பாஜகவுக்கு இருக்கிறது.
டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தல்களின் முடிவுகள் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இடைத் தேர்தல் நடந்த 15 தொகுதிகளில் ஏற்கனவே 12 தொகுதிகளைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி அவற்றில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
நான்கு மாதமே நிறைந்துள்ள எடியூரப்பாவின் ஆட்சி தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலுடன் சிறப்பான மக்கள்நலத் திட்டங்களை மேற்கொள்ளும் என உள்துறை அமைச்சர் அமிட் ஷா எடியூரப்பாவைப் பாராட்டி வழங்கிய செய்தியில் தெரிவித்தார்.
நரேந்திர மோடியும் பாஜக மீது நம்பிக்கை வைத்ததற்காக கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.