Home One Line P1 “அரசியலில் இருந்து விலகுகிறேன்” – ரபிசி ரம்லி அறிவிப்பு

“அரசியலில் இருந்து விலகுகிறேன்” – ரபிசி ரம்லி அறிவிப்பு

1281
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இளைய தலைமுறை அரசியல்வாதிகளில் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட – ஆதரிக்கப்பட்ட – தலைவர்களில் ஒருவர், பிகேஆர் கட்சியைச் சேர்ந்த ரபிசி ரம்லி. பண்டான் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான இவர் அரசியலில் இருந்து முற்றாக விலகுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அரசியலுக்கு பதிலாக ஆர்ட்டிபிஷல் இண்டெலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறையிலும், இணையம் தொடர்பான துறைகளிலும் ஈடுபட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். தான் இன்னும் கல்வி கற்க வேண்டியிருப்பதாகவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு அஸ்மின் அலியை எதிர்த்துப் போட்டியிட்ட ரபிசி சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

#TamilSchoolmychoice

நாட்டில் ஊழல் ஒழிப்பிலும், பல ஊழல் விவகாரங்களை அம்பலத்திற்கு கொண்டுவருவதிலும் தீவிரமாகப் பாடுபட்ட ரபிசி அதன் காரணமாக பல நீதிமன்ற வழக்குகளையும் எதிர்நோக்கினார்.

நேஷனல் பீட்லோட் என்ற நிறுவனத்தில் முன்னாள் அமைச்சரும் அம்னோ மகளிர் தலைவியுமான ஷரிசாட் ஜலீலின் கணவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் சாலே இஸ்மாயில் தொடர்பிலான ஊழலையும், வங்கிக் கணக்குகளையும் வெளியிட்டவர் ரபிசி.

அதற்காக, அவர் மீது அப்போதைய தேசிய முன்னணி அரசாங்கம், கடந்த 2018 பிப்ரவரி 7-ஆம் தேதி அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றம் அவருக்கு 30 மாத சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து  மேல்முறையீடு செய்த ரபிசி மேல்முறையீட்டில் வெற்றி பெற்றார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை முற்றாக விடுதலை செய்து தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம்.

எனினும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் அந்தத் தீர்ப்புக்கு எதிராக மீண்டும் மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்வதாக அறிவித்தது. ஆனால் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் தான் மேல் முறையீட்டுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று கூறி அந்த மேல்முறையீட்டை மீட்டுக் கொண்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அரசியலில் தொடர்ந்து ரபிசி இயங்க எந்தவிதத் தடையும் இல்லை என்றாலும் அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

எனினும் பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறுவதாக ரபிசி அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இன்வோக் மலேசியா (Invoke Malaysia) தரவு ஆய்வு மையம் ஒன்றை ரபிசி நடத்தி வருகிறார்.