கோலாலம்பூர்: மலேசிய இளைஞர்கள், அரசாங்கம் வழங்கிய வாய்ப்புகளை பயன்படுத்தி, புதிய மலேசியா சகாப்தத்தின் முகவர்களாக தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி, நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) நடைபெற்ற அனைத்துலக மனித உரிமைகள் தின கொண்டாட்ட தினத்தை முன்னிட்டு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.
சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களில் இளைஞர்கள் ஒரு முக்கிய உந்துசக்தியாக இருந்தனர் என்பதற்கு பல ஆண்டுகளாக மனித உரிமைகள் குறித்த அவர்களின் நிலைப்பாடு சான்றாகும் என்று அவர் கூறினார்.
“பொது வாழ்க்கையில் பங்கேற்க இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பது, மேலும் அனைவரையும் உள்ளடக்கிய மனித உரிமை செயல்முறையை நிறுவுவது அரசாங்கத்திற்கு முக்கியமானது. எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக மாறுவதற்கான திறனை அவர்கள் வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர்,” என்று அவர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.
அடிமட்ட அணிதிரட்டலுக்கான ஊக்கியாக, இளைஞர்கள் மாற்றத்திற்கு சாதகமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என்றும், மேலும் புதிய யோசனைகளையும் தீர்வுகளையும் உலகிற்கு கொண்டு வருவதற்கான திறனையும் வெளிப்படுத்துகின்றனர் என்றும் அவர் கூறினார்.
“இந்த நாட்டில் சம வாய்ப்புள்ள சமூகத்தை உருவாக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த நம் இளைஞர்களை நான் ஊக்குவிக்கிறேன். முந்தைய தலைமுறை காட்டிய முதிர்ச்சியின் அளவை நிரூபிக்கவும், மலேசிய இளைஞர்கள் மனித உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று அவர் கூறினார்.