கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் அப்துல்லா தம்பதியினர் பக்கிங்ஹாம் அரண்மனையில் இரண்டாம் எலிசபெத் இராணியுடன் கடந்த வியாழக்கிழமை மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டனர்.
வியாழக்கிழமையன்று பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வருகை தந்தபோது, மாமன்னர் தம்பதியினரை அரச வணக்கத்துடன் இளவரசர் எட்வர்ட் வரவேற்றார்.
அரச தம்பதியினரின் குழந்தைகளான பகாங் தெங்கு ஹசானால் இப்ராகிம் அலாம் ஷா, தெங்கு பங்லிமா ராஜா தெங்கு அமீர் நாசீர் இப்ராகிம் ஷா மற்றும் தெங்கு புத்ரி ராஜா தெங்கு புத்ரி இமான் அப்சான் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
பிரிட்டனுக்கான மலேசியத் தூதர் டத்தோ முகமட் சாதிக் கெதர்கனியும் உடன் கலந்து கொண்டார்.
முன்னதாக, சுல்தான் அப்துல்லா வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு வருகைப் புரிந்தார். முடிசூட்டுக்கான பாரம்பரிய இடமாகவும், ஆங்கில மன்னர்களுக்கு அடக்கம் செய்யப்பட்ட இடமாகவும், இது இங்கிலாந்தின் மிகவும் குறிப்பிடத்தக்க வழிபாட்டுத் தளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
முதலாம் உலகப் போரின்போது ஐரோப்பிய போர்க்களத்தில் கொல்லப்பட்ட அடையாளம் தெரியாத பிரிட்டிஷ் சிப்பாய் கல்லறையில் மாமன்னர் மரியாதை செலுத்தினார்.
இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் அரசாங்க கட்டளை மையத்தை வைத்திருந்த வரலாற்று நிலத்தடி வளாகமான சர்ச்சில் போர் அறைகளையும் மாமன்னர் பார்வையிட்டார்.
சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா ஆகியோர் பிரிட்டனில் வருகிற திங்கள்கிழமை வரை இருப்பர்.