கொழும்பு, ஏப்ரல் 8- இலங்கையின் மாத்தளை நகரில் கடந்த ஆண்டு 154 பேரின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அதிபர் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
மாத்தளை நகரில் மருத்துவமனை ஒன்றுக்காக புதிய கட்டடம் கட்டுவதற்காக கடந்த ஆண்டு தொழிலாளர்கள் மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 154 மனித எலும்புக் கூடுகள் புதைந்திருந்தது தெரிய வந்தது. இது இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள் அங்கு 1986ஆம் ஆண்டுக்கும் 1990ஆம் ஆண்டுக்கும் இடையில் உடல்கள் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கடந்த வாரம் உறுதிப்படுத்தினர். இந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையில் இடதுசாரி பயங்கரவாதிகள் மீது அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து, அவர்களை ஒடுக்கியது.
எனவே, தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களைத்தான் அரசு துன்புறுத்திக் கொலை செய்து, அங்கு புதைத்திருப்பதாகவும் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுனா அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், மாத்தளையில் உடல்கள் புதைக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் ஒன்றை இலங்கை அதிபர் ராஜபக்ச நியமித்து உத்தரவிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் மோகன் சமரநாயகே தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “இப்போது நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையோடு இந்த விசாரணையும் சேர்ந்து நடைபெறும். இந்த ஆணையம் தொடர்பான முழுத் தகவல்கள் அடுத்த சில தினங்களில் அறிவிக்கப்படும்” என்றார்.