புது டில்லி: பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் அறிக்கைக்கு உத்தியோகபூர்வ ஆட்சேபனை அறிவிக்க இந்திய அரசு நேற்று சனிக்கிழமை மலேசிய தூதரை அழைத்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் அறிக்கை வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் இருதரப்பு உறவுகளில் தலையிடுவதற்கான அரசதந்திர நடைமுறைக்கு ஏற்ப இல்லை என்று மலேசிய தூதருக்கு அறிவிக்கப்பட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளதாகக் மலேசியாகினி தெரிவித்துள்ளது.
“இந்த அறிக்கை முற்றிலும் அர்த்தமற்றது மற்றும் உணர்வற்றது. மலேசியா இருதரப்பு உறவுகள் குறித்து நீண்டகால மற்றும் மூலோபாய பார்வைகள் குறித்து சிந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி அந்த அறிக்கை கூறியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் மகாதீர் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கருத்து தெரிவித்ததற்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம், மகாதீரின் அறிக்கை தவறானது எனவும், உண்மைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியது.
2015-க்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம் குடியுரிமை திருத்தச் சட்டம் உதவும் என்று நரேந்திர மோடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.